புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் விருப்பமான நாடாக பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ள 90 நாட்களுக்கான ஷெங்கன் விசா வழங்கப்படுகிறது.
கடந்த 2022-ல் ஷெங்கன் விசா கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் துருக்கி முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 7 லட்சம் பேர் ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். 2-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 6.87 லட்சம் பேர் ஷெங்கன் விசா கோரியுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் 6 லட்சம் இந்தியர்கள் ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரான்ஸுக்கு சுற்றுலா செல்ல ஷெங்கன் விசா கோரி 1.38 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து செல்ல 1.06 லட்சம் பேர், ஸ்பெயினுக்கு செல்ல 80,098 பேர், ஜெர்மனிக்கு செல்ல 76,352 பேர், நெதர்லாந்துக்கு செல்ல 52,616 இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஷெங்கன்விசா கோரி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கணிசமான விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றன. ஷெங்கன் விசா நிராகரிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக பிரான்ஸ் சுமார் 20% இந்தியர்களின் விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறது.