ராகுல் காந்தி செலக்‌ஷன் யார்? டெல்லியில் ஆடு புலி ஆட்டம்… சீறும் சித்தராமையா, வெடிக்கும் டிகே சிவக்குமார்!

கர்நாடகா முதலமைச்சர் யார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. வெற்றி காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. அதுவும் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை பிடித்து அறுதி பெரும்பான்மை பெற்றுவிட்டது. 1989ஆம் ஆண்டிற்கு பின்னர் காங்கிரஸ் பெற்றுள்ள அதிகப்படியான தொகுதிகள் இது என்பது கவனிக்கத்தக்கது. இதனால் கடந்த 2018க்கு பின் நடந்ததை போல பாஜக ஆபரேஷன் எதுவும் ஒர்க் அவுட் ஆகாது.

கர்நாடகா முதலமைச்சர்

கடந்த மே 13ஆம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 4 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் தேர்வில் முடிவு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் முடிவுகள் எடுப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

கார்கே உடன் சந்திப்பு

இந்நிலையில் இரு தலைவர்களும் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர். நேற்று மட்டும் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தனித்தனியாக மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். ஒருவேளை டிகே சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனில், அவரது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி நீட்டிக்கப்படும். டிகே சிவக்குமார் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படும் என்றெல்லாம் பேசப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி உடன் சந்திப்பு

இதுதவிர சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி கொண்டு வரலாமா? என்பது பற்றியும் ஆலோசித்துள்ளனர். ஆனாலும் இருவரும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை எனத் தெரிகிறது. இந்த சூழலில் தான் இரு தலைவர்களும் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளனர். அதுமட்டுமின்றி கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பை நிகழ்த்துகிறார்.

அதிருப்தியில் டிகே சிவக்குமார்

இதில் டிகே சிவக்குமார் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிவதாக டெல்லி செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நேற்றைய தினம் கட்சி தலைமையின் ஆலோசனைக்கு பின்னர் வெளியே வந்த போது செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதாவது, உங்களுக்கு என்ன கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? எனக் கேட்டனர். அதற்கு, சாப்பாடு கிடைக்கும் என்று காட்டமாக பதிலளித்து விட்டு சென்றுள்ளார்.

டெல்லியில் இறுதி முடிவு

டிகே சிவக்குமார் கட்சிக்காக நிறைய உழைத்துள்ளார் என்பதில் கட்சி மேலிடம் தெளிவாக இருக்கிறது. எனவே அவரை முழுமையாக சமாதானம் செய்து உரிய பதவி அளிக்கப்பட வேண்டும் என ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என டிகே சிவக்குமார் குறித்து வதந்திகள் பரவின. இதுபற்றி கேட்ட போது, அப்படி எதுவும் இல்லை. தேவையின்றி அவதூறு பரப்பினால் வழக்கு தொடருவேன் என எச்சரித்து விட்டு சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.