மணிப்பூர் வன்முறை | 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது காங்கிரஸ்

புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்கான காரணங்களைக் கண்டறிய 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “மணிப்பூரில் மாநிலம் தழுவிய அளவில் ஏற்பட்ட வன்முறைக்கான உண்மைக் காணங்களைக் கண்டறியும் நோக்கில் 3 பேர் கொண்ட குழுவை கட்சித் தலைவர் அமைத்துள்ளார். முகுல் வாஸ்னிக், அஜோய் குமார், சுதிப் ராய் பர்மன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மணிப்பூரில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர், மாநில காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் இக்குழு உண்மை கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும். இக்குழு தனது அறிக்கையை கூடிய விரைவில் கட்சித் தலைமைக்கு அளிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் என்னைச் சந்தித்து மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து எடுத்துக்கூறினர். அங்கு மக்கள் எத்தகைய சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை அவர்கள் விளக்கினார்கள். அங்கு இன்னமும் பதற்றம் நிலவிவருகிறது. அங்கு இயல்பு நிலையைக் கொண்டு வர மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அனைத்து சமூகங்களும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே, உண்மை கண்டறியும் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மணிப்பூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் 73 பேர் கொல்லப்பட்டனர். 231 பேர் காயமடைந்தனர். மத வழிபாட்டுத்தலங்கள் உள்பட 1,700 கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.