PVR இந்தியா முழுவதும் இயங்கி வரும் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.333 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ.105 கோடி இழப்பைச் சந்தித்திருந்தாகக் கூறியிருந்த நிலையில் தற்போது, ஏற்பட்டுள்ள இந்த ரூ.333 கோடி நஷ்டத்தையும் ஈடு செய்வதற்காக இந்தியா முழுவதும் இயங்கி வரும் தங்களுக்குச் சொந்தமான திரையரங்குகளில் சுமார் 50 திரையரங்குகளை ஆறு மாதத்திற்குள் மூடவிருப்பதாகக் கூறியுள்ளது.
இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவ பல பாலிவுட் பிரபலங்கள் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும், கோவிட் பெருந்தொற்று மற்றும் ஓ.டி.டி-யின் வளர்ச்சியால் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றும் பலரும் கூறிவருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், திரையரங்குகள் குறைந்து வருவது திரைத்துறைக்கு நல்லதல்ல என்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்துகொண்டே இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா, “நம் நாட்டிற்கு இன்னும் அதிகமான திரையரங்குகள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில் திரையரங்குகள் மூடப்படுவது திரைத்துறைக்கு நல்லதல்ல. அதேசமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் படம் பார்ப்பதற்கு தங்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைச் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையை எப்படியாவது சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.