'தி கேரளா ஸ்டோரி'-க்கு தடை விதிக்கவில்லை : தமிழக அரசு விளக்கம்

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் உள்ள இந்து பெண்களை முஸ்லிமாக மாற்றி அவர்களை பயங்கரவாதிகளாக அனுப்பி வைக்கிறார்கள் என்ற பின்னணில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தியா முழுவதும் வெளியான இந்த படத்திற்கு மேற்கு வங்க மாநிலம் தடைவிதித்தது, கேரளாவும், தமிழ்நாடும் மறைமுகமாக படத்தை தடுத்து நிறுத்தியது. சில மாநிலங்கள் வரிவிலக்கு அளித்தன.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் தடை விதித்தை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் காவல்துறை மூலமாக உச்சநீதி மன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த மே 5ம்தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தியில் 19 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திரைப்படத்தை தடை செய்து எவ்வித உத்தரவையும் தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு தடை செய்ததாக எவ்வித ஆவணத்தையும் மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை. மனுதாரரின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்தது. தடையில்லாமல் திரையிடப்படுவதை உறுதி செய்ய போராட்டங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், உன்னிப்பாக கவனித்து போராடியவர்களின் மீது சென்னையில் 5, கோவையில் 4 என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.

திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போதுமான ஏற்பாடுகளை செய்திருந்தது. 25 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 965 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாத நடிகர்கள் நடித்தது, போதுமான வரவேற்பு இல்லாமை ஆகியவற்றின் காரணமாக தியேட்டர் உரிமையாளர்களே மே 7ம் தேதியில் இருந்து திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்திக்கொண்டதாக தோன்றுகிறது. இந்த ரிட் மனு வாயிலாக மனுதாரர் விளம்பரம் தேடும் நோக்கில் செயல்பட்டு உள்ளார். மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மீண்டும் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.