காங்கிரஸ் கையில் 2 திட்டங்கள்… சித்தராமையா vs டிகே சிவக்குமார்… கர்நாடகாவின் அடுத்த சி.எம் இவர்தானாம்?

கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் போட்டா போட்டி நிலவி வருகிறது. இருவரையும் டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் நாற்காலியை விட்டு தர இருவருக்கும் மனமில்லை. முதலில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருவரையும் தனித்தனியே அழைத்து பேசினார்.

ராகுல் காந்தி உடன் சந்திப்பு

இதையடுத்து ராகுல் காந்தியை தனித்தனியே சந்தித்து பேசி வருகிறார். இதற்கிடையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்களின் ஆதரவு குறித்து கேட்டறிய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இன்றைய தினம் ஒருமித்த முடிவு எட்டப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர். அதேசமயம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறதாம். இதுபற்றி விசாரிக்கையில், காங்கிரஸ் மேலிடம் வசம் இரண்டு விதமான திட்டங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

முதலமைச்சர் சீட்டிற்கு இரண்டு திட்டங்கள்

ஒன்று, சித்தராமையாவை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பது, டிகே சிவக்குமாருக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, துணை முதல்வர் மற்றும் 2 முக்கிய துறைகளை ஒதுக்குவது. இரண்டாவது, முதலமைச்சர் நாற்காலியில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரையும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு நியமிப்பது. இதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

குருபா vs ஒக்கலிகா

கர்நாடகா முதலமைச்சர் நாற்காலியில் சமூக ரீதியிலான கணக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. குருபா சமூகத்தில் இருந்து சித்தராமையாவிற்கு ஒருமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே இம்முறை ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த டிகே சிவக்குமாருக்கு முதலமைச்சர் நாற்காலி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

டிகே சிவக்குமாருக்கு பெருகும் ஆதரவு

இந்த விஷயத்தில் ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள், பல்வேறு ஒக்கலிகா அமைப்பின் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பலகட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் சித்தராமையா தான் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது டிகே சிவக்குமார் தரப்பிற்கு அதிருப்தியாக மாற வாய்ப்புள்ளது.

கர்நாடகா தேர்தல் வெற்றி

ஏனெனில் உட்கட்சி பூசல்களை சரிசெய்து கடந்த சில ஆண்டுகளாக கடின உழைப்பை செலுத்தி அடிமட்டத்தில் இருந்து வேலை செய்திருக்கிறார் டிகே சிவக்குமார். பாஜக வசமிருந்த லிங்காயத் வாக்குகளை காங்கிரஸ் வசம் திருப்பியதிலும் இவரது பங்கிருக்கிறது. 135 இடங்கள் என்பதை காங்கிரஸ் மேலிடம் கூட எதிர்பார்க்கவில்லை. அதற்கு டிகே சிவக்குமாரின் களப்பணி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வெடிக்கும் உட்கட்சி பூசல்

இத்தகைய சூழலில் முதலமைச்சர் நாற்காலி கிடைக்காமல் போவது மீண்டும் பூசலை ஏற்படுத்தலாம். இதை கட்சி மேலிடம் எப்படி சமாளிக்கப் போகிறது? சமாதானப்படுத்தப் போகிறது? என்பது தான் கவனிக்க வேண்டியதாக உள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா அளித்த பேட்டியில், கர்நாடகா முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு அல்லது நாளை வெளியாகும் எனக் கூறிவிட்டு சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.