பிறந்தநாள் கேக்கில் விபூதி; அந்தரத்தில் பறந்த எலுமிச்சை; மோசடி – போலி மந்திரவாதியின் பகீர் பின்னணி

சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலையில் வசித்து வருபவர் கௌதம். என்.ஆர்.ஐ ஆன இவர் நைஜீரியாவில் பணியாற்றிவந்தார். அப்போது கௌதமுடன் வேலை பார்த்தவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி. இவர்கள் இருவரும் ஆன்மிகத்தில் அதிக பற்றுக் கொண்டவர்கள் என்பதால் குடும்ப  நண்பர்களாகினர். இந்தச் சூழலில்தான் சுப்பிரமணி ஆன்மிகம், அம்மாவின் ஆவி என கதை கதையாக பொய் சொல்லி 6 கோடி ரூபாய்க்கு மேல் தன்னை ஏமாற்றி விட்டதாக கெளதம் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார்.

அதன்பேரில்  போலீஸார் 406, 420 ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சுப்பிரமணியை ஓராண்டாக தேடிவந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்திருக்கிறார்கள்.

கெளதம்

இதுகுறித்து கௌதமிடம் பேசினோம். “நான் எம்.பி.ஏ படித்துவிட்டு நைஜீரியாவில் உள்ள நிறுவனத்தில் மேனேஜராக வேலைப்பார்த்து வந்தேன். கடந்த 2005-ம் ஆண்டு கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி முத்து கணபதி என்பவர் அந்தக் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ்  வேலைக்குச் சேர்ந்தார். சுப்பிரமணி தமிழில் பேசியதால் நெருங்கிப் பழகினோம். சுப்பிரமணி, தன்னை சாய் பாபாவின் பக்தர் என்று   அடிக்கடி சொல்லிக் கொண்டு பஜனை, பூஜைகளைச் செய்வார்.

அப்போது சாய்பாபா போட்டோவிலிருந்தும் வீட்டின் சுவரிலிருந்தும் விபூதியை வரவழைப்பார். கையில் திடீரென எலுமிச்சை பழத்தை வரவழைத்து அதை அந்தரத்தில் பறக்கவிடுவார்.  அதையெல்லாம் பார்த்த பிறகு சுப்பிரமணியை நானும் என் குடும்பத்தினரும் முழுமையாக நம்பத் தொடங்கினோம். பிறகு நான் துபாய் சென்றுவிட்டேன். துபாயில் சாய் பாபாவின் பிறந்ததினத்தன்று என்னை அவரின் வீட்டுக்கு வரச் சொன்னார். அப்போது கேக் வாங்கி வரும்படி கூறியிருந்தார். அதன்படி நானும் கேக் வாங்கி கொண்டு சென்றேன். சாய் பாபாவின் போட்டோ முன்பு கேக்கை வைத்து பூஜை செய்தார். அதன்பிறகு அந்த கேக் பெட்டியை திறந்து பார்த்தபோது அதற்குள் விபூதி இருந்தது. இதைப் போல இன்னொருநாள், `சாய் பாபா வீட்டுக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்’ என்று என்னிடம் சுப்பிரமணி தெரிவித்தார். அதனால் நானும் சுப்பிரமணி வீட்டுக்கு சென்றிருந்தேன். 

கேக்

அப்போது கதவை திறந்து வைத்த சுப்பிரமணி, பழங்களை வெட்டி வைத்திருந்தார். நான்,  சுப்பிரமணியின் மனைவி பத்மா, மகள் ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது எங்களை கண்களை மூடி தியானம் செய்ய சொன்னார் சுப்பிரமணி. கண்ணை திறந்து பார்த்தபோது சுப்பிரமணியின் மகள் நெற்றியில் விபூதி இருந்தது. வெட்டி வைக்கப்பட்டிருந்த பழங்களின் மீதும் விபூதி இருந்தது. அதைப் பார்த்து, சாய்பாபா ஆசீர்வதித்துவிட்டு சென்றிருக்கிறார் என்று சுப்பிரமணி தெரிவித்தார். அதையும் நம்பினேன்.

என்னுடைய அம்மா கடந்த 1995-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதனால் என்னுடைய அம்மா குறித்து சுப்பிரமணிக்கு தெரியாது. ஆனால் என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும், ஏது பிடிக்காது என்பதை சுப்பிரமணி சொன்னார். அதையெல்லாம் கேட்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மேலும் பூஜையின் போது `கெளதம், அம்மா  உன்பக்கத்தில்தான் நிற்கிறார்’ என்று சுப்பிரமணி கூறினார். நான் கண் திறந்து பார்த்தபோது எனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு அவர், நீ பரிசுத்தமாய் இல்லை அதனால் அம்மா உன் கண்ணுக்குத் தெரியவில்லை. சில பூஜைகள் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணி தெரிவித்தார். அதன்படி நானும் நடந்தேன்.

மந்திரவாதி சுப்பிரமணி

என்னை நேரில் சந்திக்கும்போதெல்லாம் சாய்பாபா பிரசாதம் எனக்கூறி விபூதியை கொடுப்பார். என் முதுகு பகுதியில் (spinal cord) தன்னுடைய கையை வைத்து ஒர் அழுத்தம் கொடுப்பார். மேலும் அவரின் கண்களை சில நிமிடங்கள் பார்க்கச் சொல்வார். அதன்பிறகு அவரின் கட்டுப்பாட்டுக்குள் நான் சென்றுவிடுவேன்.  

பின்னர், சுப்பிரமணி, என்னிடம் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் பேச்சை குறைத்துக் கொள்ளும்படி  தெரிவித்தார். அதோடு என்னை சந்நியாசி போல வாழும்படி கூறிய அவர் என்னை காவி சர்ட், வேட்டி  அணியும்படி தெரிவித்தார். மேலும் மொட்டையடிக்கவும் கட்டாயப்படுத்தினார். அதன்படி நானும் செய்தேன். என்னை அவர் சாய்ராம் கௌதம் என்றுதான் அழைப்பார். கேரளாவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து என்னுடைய குடும்பத்துக்காக மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து பூஜைகளையும் செய்வதாகக் கூறி பணத்தை வாங்கினார். சுப்பிரமணி கேட்டபோதெல்லாம் பணத்தை வங்கி மூலமாகவும் ரொக்கமாகவும் கொடுத்துவந்தேன். வங்கி மூலமாக 2 கோடி ரூபாயும்  ரொக்கமாக 4 கோடி ரூபாய் வரை  கொடுத்திருக்கிறேன். அந்தப் பணத்தை கொண்டு சுப்பிரமணி, சொத்துக்கள், மகளை லண்டனில் படிக்க வைத்து வருகிறார்.

கைது

என்னுடைய அப்பாவின் ஏ.டி.எம் கார்டையும் சுப்பிரமணி தன்னுடைய பெர்சனல் தேவைக்காக பயன்படுத்தினார். அப்பாவின் இறப்புக்கு பிறகுதான் சுப்பிரமணியின் மோசடிகள் எல்லாம் எனக்குத் தெரியவந்தது. அதனால் அவரை விட்டு நான் விலக தொடங்கினேன். உடனே சுப்பிரமணி, உனக்கு கட்டம் சரியில்லை, கேன்சர் வரும் என வீடியோ காலில் மிரட்டினார். சுப்பிரமணியின் பின்னணியை விசாரிக்க வேண்டும். சுப்பிரமணி நடத்தி வந்த கம்பெனியில் பார்ட்னராக பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடமும் சுப்பிரமணியின் குடும்பத்தினரிடமும் விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்” என்றார்.

 

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “சுப்பிரமணி, மந்திரம், மாந்திரீகம், பில்லி. சூனியம் உள்ளிட்ட வேலைகளோடு ஆடிட்டர்  பணியையும் செய்து வந்திருக்கிறார். கெளதமின் பிசினஸ் பார்ட்னரான தன்சானியாவில் (Tanzania) வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரையும் மந்திரவாதி சுப்பிரமணி சந்தித்திருக்கிறார். கெளதமின் பிசினஸ் பார்ட்னரிடமும் உங்களுக்கு கண்டம் இருக்கிறது. சாய்பாபா சொல்கிறார் என்று சொல்லியிருக்கிறார். அவரையும் சுப்பிரமணி ஏமாற்றினாரா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சில மாதங்கள் க்ளீன் சேவிங், சில மாதங்கள் தாடி என கெட்டப்பை அடிக்கடி மாற்றுவது சுப்பிரமணியின் ஸ்டைலாக இருந்திருக்கிறது. இவர் ஒப்பந்தம் அடிப்படையில் கண் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல் உள்ளது. கௌதமிடம் ஏமாற்றிய பணத்தை திரும்ப சாய்பாபா கொடுத்துவிடுவார் என்றுதான் விசாரணையின்போது சுப்பிரமணி தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

 

காவல்துறை

போலீஸ் விசாரணையின்போது, சுப்பிரமணியிடம் நீங்கள் ஜெயிலுக்கு போவது குறித்து முன்கூட்டியே தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் எனக்கும், என் ரத்த சொந்தங்களுக்கும் எதிர்காலத்தை கணிக்க முடியாது என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.