புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருவதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் சித்தராமையாவை முதல்வராக்க விரும்புவதாகவும், டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பொறுப்பும், 6 துறைகளும் ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “முதல்வர் யார் என்பது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை. உள்நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட செய்திகளையோ, உண்மைக்குப் புறம்பான செய்திகளையோ ஊடகங்கள் பரப்ப வேண்டாம். இன்று அல்லது நாளைக்குள் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும். மாநில அமைச்சரவை அடுத்த 72 மணி நேரத்தில் பதவியேற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள்: டெல்லி வந்துள்ள சிவகுமார் ஆதரவாளர்கள், அவரை முதல்வராக்கக்கோரி ராகுல் காந்தியின் வீட்டின் முன்பாக கோஷங்களை எழுப்பினர். சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் எனும் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனிடையே, சித்தராமையாவின் ஆதரவாளர்களும் ராகுல் காந்தியின் வீட்டின் முன் குழுமி, அவருக்கு ஆதரவாக கோஷமிட்டு வருகின்றனர்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. இதையடுத்து, பெங்களூருவில் கூட்டப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தில், முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மூவர் குழு, எம்எல்ஏக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது. அதோடு, முதல்வர் விவகாரத்தில் இறுதிமுடிவை கட்சித் தலைமை மேற்கொள்ள எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், முதல்வரை அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவும், சிவகுமாரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இருவரிடமும் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.