ஊழிக்காலத்தில் அல்லது ஒரு யுகமுடிவில் ஒன்றில் பதுங்கு குழியை, பிணக்குழியை அல்லது மலக்குழியை வெட்டிக் கொண்டிருந்த மக்கள் எதைச் சமைத்தார்கள்? எதைச் சாப்பிட்டார்கள்? எதைக் குடித்தார்கள்? அல்லது சாப்பிடவும் குடிக்கவும் அவர்களுக்கு நேரம் இருந்ததா? அல்லது சாப்பிடவும் குடிக்கவும் அவர்களுக்கு பசி தாகம் இருந்ததா?
உணவு ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட போர்க்களம் அதுவென்று தமிழ் சிவில் சமூக அமையம் தனது அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சமைக்க வழியில்லாதவர்களுக்கு கஞ்சி வழங்கியது. கஞ்சிக் கொட்டில்கள் ஆங்காங்கே காணப்பட்டன.
உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தை நினைவுகூர உணவையே ஒரு நினைவுப் பொருளாக உபயோகிக்கலாம் என்று கூறிய தமிழ் சிவில் சமூக அமையம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக அறிமுகப்படுத்தியது.
தமிழின யுகபுராணம்
இறுதிக்கட்டப்போரில் கஞ்சி மட்டுமல்ல,வாய்ப்பன் இருந்தது, பொரித்த ரொட்டி இருந்தது, பெயர் தெரியாத இலைகள் இருந்தன.
அது ஒரு யுக முடிவு.
அதன்பின் எழுதிய கவிதைகளில் ஒரு பகுதியை தொகுத்து 2014இல் எழுநா வெளியீடாக யுகபுராணம் என்ற பெயரில் வெளியிட்டேன். ஏனைய கவிதைகளை பிறகு ஒரு காலம் செதுக்கி எழுத வேண்டும் என்று எனக்குள்ளேயே ஊறவிட்டேன். ஓரூழிக் காலம் என்னுள் கிடந்து ஊறியது.
கிட்டத்தட்ட10 ஆண்டுகளின் பின் பெருந்தொற்று நோய் உலகத்தைக் கவ்விப் பிடித்த போது, பத்து ஆண்டுகளாக ஊறிக் கிடந்தவற்றை மீளச் செதுக்கத் தேவையான மனோ நிலையும் கால அவகாசமும் கிடைத்தன.
ஒரு யுக முடிவும் பெருந் தொற்று நோயும் ஒன்றல்ல.
இறுதிக்கட்டப் போரில் உணவு இருக்கவில்லை. உயிர்ப்பாதுகாப்பு இருக்கவில்லை. ஆனால் பெருந்தொற்று நோய்க்காலத்தில் உணவு கிடைத்தது. ஒரு வைரசுக்கு பயந்து சமூகம் வீடுகளுக்குள் முடங்கியது.இறுதிக்கட்டப் போர் எனப்படுவது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல். ஆனால் பெருந்தொற்று நோய் உலகம் முழுவதுமான அச்சுறுத்தல்.
எனினும், இரண்டுமே வாழ்வின் நிச்சயமின்மைகளை, மனிதனின் இயலாமைகளை உணர்த்திய காலகட்டங்கள்.
அதனால் பத்தாண்டுகளாக கிடந்து ஊறிய கவிதைகளை எழுதி முடித்தேன்.
ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் அழிவின் பின் தோன்றிய கவிதைகளும் பரிசோதனைகளும், முழு மனித குலத்துக்குமான அழிவுகாலம் ஒன்றில் எழுதி முடிக்கப்பட்டன.
நினைவேந்தல் கஞ்சி
இத்தொகுப்பில் இறுதிக்கட்டப் போரின் பின்னரான கவிதைகளும் ஒரு நூற்றாண்டின் பின் உலகைத் தாக்கிய பெருந்தொற்று நோய் பற்றிய கவிதைகள் சிலவும் உண்டு. பெருந்தொற்று நோய்க்குப் பின்னரான கவிதைகளும் உண்டு.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வந்த ஆண்டுகளில் எழுதப்பட்டவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது இத்தொகுப்பு வெளிவருமிக் காலக்கடத்தில், நாடு மேலும் ஒரு போராட்டத்தைத் தின்று செமித்துவிட்டு ஏவறை விட்டுக்கொண்டிருக்கிறது.
பெருந்தொற்று நோயானது போரும் வைரசும் ஒன்று அல்ல என்பதை நிரூபித்தது. பொருளாதார நெருக்கடியானது யுத்த வெற்றியைச் சாப்பிட முடியாது என்பதை நிரூபித்தது.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக வந்த தன்னெழுச்சிப் போராட்டம் யுத்த வெற்றி நாயகர்களைத் தற்காலிகமாகத் தோற்கடித்தது.
எந்தக் குடும்பம் போரை வென்றதற்காக சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதோ,அதே குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று அதே மக்களால் ஓடஓடத் துரத்தப்பட்டது.
பொருளாதார நெசுக்கடி
யுத்த வெற்றி நாயகர்கள் தாம் வென்று கொடுத்த நாட்டிலேயே தனது சொந்த மக்களிடமிருந்து தப்புவதற்காக படை முகாம்களில் ஒழியவேண்டி வந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு வன்னி கிழக்கின் அழுக்கான கடற்கரையில் உலகின் மூத்த நாகரிகம் ஒன்றின் வழித்தோன்றல்கள் கஞ்சிக் கொட்டில்களின் முன்னே வரிசையாக நின்றார்கள்.சரியாக 12ஆண்டுகள் கழித்து முழு நாடுமே எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நாட்கணக்காக வரிசையில் நின்றது.
உலகை நோக்கிக் கையேந்தி நின்றது.எந்தக் காலிமுகத்திடலில் யுத்தவெற்றி பீரங்கிகள் முழங்கிக் கொண்டாடப்பட்டதோ,அதே காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைக்கப்பட்டது.
ஐ.எம்.எப் கடன்
13 ஆண்டுகளின் முன் தனது மக்களில் ஒரு பகுதியினரைத் தோற்கடித்ததை தெருக்களில் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய அதே நாடு, ஐ.எம்.எப் கடன் கொடுத்தபோது பட்டாசு கொளுத்திக் கொண்டாடியது.
ஐ.எம்.எப் கடனும் ஒரு பொறிதான். பொறிக்குட் சிக்குவதை கொண்டாடும் ஒரு நாடு 13ஆண்டுகளுக்கு முன் வன்னி கிழக்கில் பாதுகாப்பு வலையம் என்று கூறி மரணப் பொறிகளை உருவாக்கிய ஒரு நாடு, இப்பொழுது பேரரசுகளின் கடன் பொறிகளுக்குட் சிக்கிவிட்டது.
அது இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓரப்பம்.அது இப்பொழுது போரில் தோற்றவர்களுக்குமில்லை வென்றவர்களுக்குமில்லை.