குவாஹாட்டி: உடல் எடை அதிகம் கொண்ட போலீஸாரை வேலையில் இருந்து தூக்குவதற்கான அதிரடி உத்தரவை அசாம் அரசு பிறப்பித்திருக்கிறது. இதனால் குண்டு போலீஸார் அனைவரும் தூக்கம் இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான போலீஸார் அதிக உடல் எடையுடன் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணம், அவர்கள் அதிகமாக சாப்பிடுவது அல்ல. ஒழுங்காக தூங்காதது தான்.
ஆம்.. காவல்துறையினருக்கு காலை ஷிப்ட், நைட் ஷிப்ட் என மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஒரு வாரம் காலையில் தூக்கம், அடுத்த வாரம் இரவில் தூக்கம் என இருப்பதால் உடலில் உள்ள இயற்கை கடிகாரம் குழம்பி போய்விடும்.
நான் இரவு 10 மணி ஆகிவிட்டால் டான் என தூங்கிவிடுவேன் என ஒருவர் கூறுவதற்கு அவரது உடலில் உள்ள இயற்கை கடிகாரம்தான் காரணம். ஆனால், நேரம் தவறி தவறி தூங்குவதால் போலீஸார் அனைவருக்குமே இந்த இயற்கை கடிகாரம் வேலை செய்யாமல், தூங்குவதில் சிரமம் ஏற்படும். தூக்கமின்மையால் செரிமானம் சரியாக இருக்காது. இதுதான் பல போலீஸார் தொந்தியுடன் வலம் வருவதற்கு காரணம். அதே சமயத்தில், சில போலீஸார் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தவறாமல் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட் ஆக வைத்திருப்பார்கள்.
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா அண்மையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, உடல் எடை அதிகம் கொண்ட, அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்ட போலீஸாருக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அசாம் போலீஸாரை கிலியில் ஆழ்த்திய இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்திருப்பதாக அசாம் டிஜிபி ஜிபி சிங் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அசாமில் உள்ள போலீஸாருக்கு (காவலர் முதல் ஐபிஎஸ் அதிகாரி வரை) இன்றில் இருந்து 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளாக உடல் எடை அதிகம் கொண்ட போலீஸார் தங்கள் எடையை குறைத்துக் கொள்ள வேண்டும். 3 மாதங்களுக்கு பிறகு அனைவருக்கும் பிஎம்ஐ (BMI) (உயரத்துக்கேற்ற எடை) சோதனை செய்யப்படும். இதில் பிஎம்ஐ 30+ இருப்பவர்களுக்கு அடுத்த 3 மாதம் (நவம்பர் வரை) டைம் கொடுக்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் மேற்குறிப்பிட்ட பிஎம்ஐ-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு விரும்ப ஓய்வு கொடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.