PhonePe, Paytm மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?

நாட்டில் இப்போது டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகள் வெகுவாக அதிகரித்துவிட்டது, அதிலும் குறிப்பாக 2016ம் ஆண்டில் நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்திருக்கிறது.  வங்கிக் கிளைகள் அல்லது ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக கால் கடுக்க காத்திருந்து நிற்பதை விட, ஆன்லைன் பேமெண்ட்டுகள் பணம் அனுப்ப எளிதான மாற்றாக மாறிவிட்டன.  யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துவது எளிதானது என்றாலும், சில சமயங்களில் தவறான யுபிஐ ஐடிகள் அல்லது கணக்கு எண்கள் தவறான பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் மிகவும் கவனமாக இதனை கையாள  அவசியம்.  யூபிஐ கட்டணங்கள் மூலமாக ஆன்லைனில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, ​​தவறான நபரின் கணக்குக்கு தொகை பரிமாறப்படும் சிக்கலை பெரும்பாலான மக்கள் சந்திக்கின்றனர்.  தவறாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற தீர்வு இருப்பதால் இதுகுறித்து மக்கள் கவலையடைய தேவையில்லை.

நீங்கள் தவறான எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டால், பதற்றம் கொள்ளாமல் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் GPay, PhonePe, Paytm போன்ற யூபிஐ பேமெண்ட் தளங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டியது தான்.  பரிவர்த்தனை விவரங்களைப் பகிர்வதன் மூலம் புகார் அளிக்க வேண்டும் மற்றும் இதுகுறித்து நீங்கள் உங்கள் வங்கியிலும் புகார் செய்ய வேண்டும்.  ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறாகப் பணம் செலுத்தினால் புகார் அளிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று பரிந்துரைக்கிறது.  மேலும் தவறாக பரிவர்த்தனை செய்யப்பட்ட 3 நாட்களுக்குள் புகார் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இதேபோல் யூபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் தவறான வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டீர்கள் என்றால் உடனே 18001201740 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும்.  புகார் அளித்த பிறகு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று, அதில் உள்ள அனைத்து தகவல்களுடன் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.  

உங்களுக்கு வங்கி உதவி செய்ய முன்வரவில்லை என்றால் அது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒம்புட்ஸ்மேனிடம் bankingombudsman.rbi.org.in என்கிற முகவரியில் புகார் செய்ய வேண்டும். மொபைலிலுள்ள பரிவர்த்தனை தகவலை ஒருபோதும் டெலீட் செய்துவிடக்கூடாது, ஏனெனில் அதிலுள்ள  PPBL எண் உங்களுக்கு புகாரளிக்க தேவைப்படும்.  புகார் படிவத்தில் மற்ற அனைத்து விவரங்கள் மற்றும் உங்கள் குறைகளுடன் இந்த எண்ணைக் குறிப்பிட மறக்காதீர்கள்.  மேலும் நீங்கள் யூபிஐ சேவைகளை வழங்கும் என்பிசிஐ இணையதளம் மூலமாகவும் தவறான பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்கலாம்.  எப்போதும் ஆன்லைனில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போதும் பெறுநரின் யூபிஐ ஐடி, அவர்களின் மொபைல் எண், மாற்றப்படும் தொகை மற்றும் உங்கள் கணக்கின் யூபிஐ பின்னை உள்ளிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.