மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் தீவிரம் – புதிய வசதிகள் என்னென்ன?

மதுரை: மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்திற்கு இணையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மறு சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: “மதுரை ரயில் நிலையத்தில் விமான நிலையத்திற்கு இணையான வசதிகளை பயணிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக ரூ.347.47 கோடியில் மறுசீரமைப்பு பணி தொடர்ந்து நடக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ள சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரருக்கு 2022 செப்டம்பரில் பணி ஆணை வழங்கப்பட்டது. மும்பை தனியார் நிறுவனம் பணிகளை கண்காணிக்கும் நிலையில், திட்டமிட்டபடி, 36 மாதத்தில் முடிக்கும் நோக்கில் சீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கான பண்டகசாலை கட்டிடம், உப மின் நிலைய கட்டிடத்திற்கான அடித்தள கட்டுமான பணி நிறைவுற்றன. பண்டகசாலை கட்டிடம் கட்ட தூண்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. கிழக்குப் பகுதி முதல் நிலை ரயில் நிலைய கட்டிடத்திற்கான தாங்கு திறன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சிமென்ட் கான்கிரீட் கலவை தயாரிக்கும் சாதனம் நிறுவப்பட்டு பணி நடக்கிறது. கிழக்குப் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த ஓரடுக்கு வாகன நிறுத்தக கட்டிடம், பழைய பலவகை உணவு விற்பனை நிலையம், சுமை தூக்கும் பணியாளர் ஓய்வு கூடம், ரயில் மேலாளர் சாதன அறை ஆகியவை இடிக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பகுதி ரயில் நிலைய கட்டிடம் , வாகன நிறுத்தகம் கட்டுவதற்கு தொலைத் தொடர்பு இணைப்பு தொடர்கள், தண்ணீர் , கழிவுநீர் குழாய் தொடர்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. ரயில்வே தபால் துறை செயல்படுவதற்காக தற்காலிக கட்டு மானமும் தொடர்ந்து நடக்கிறது. உப மின் நிலையத்திற்கு மின் வழங்கல் வயர்களை பதிக்க அகழிகள் தோண்டப்படுகின்றன. ரயில் நிலைய கட்டிட வடிவமைப்பு பணிகளுக்கான வரைபடங்களும் தயாராகுகின்றன. ஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடம், வங்கி தானியங்கி பணம் வழங்கும் இயந்திர கட்டிடம், கழிப்பறைகளை இடிக்கப்படுகின்றன.

மேலும்,பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க, ஆர் எம் எஸ் சாலையிலுள்ள பழைய ரயில்வே காலனி ஊழியர் குடியிருப்புகள், கீழ்நிலை நீர் தொட்டி இடித்து அகற்றும் பணி, தர கட்டுப்பாடு ஆய்வகம் அமைத்தல், பசுமை தரச் சான்றிதழ் வாங்குவது போன்ற பணிகளும் ஏற்கெனவே நிறைவுற்றன.

ரயில் நிலைய கிழக்கு, மேற்கு பகுதியிலும் தனித்தனியாக இரண்டு முனைய கட்டிடங்கள் அமைகின்றன. கிழக்குப் பகுதியில் இரண்டு பல அடுக்கு வாகன நிறுத்தகங்கள், மேற்கு பகுதியில் ஒரு பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைகிறது. கிழக்கு, மேற்கு பகுதி கட்டிடங்களை இணைக்கும் விதமாக ரயில் பாதைக்கு மேல் பயணிகள் காத்திருப்பு அரங்கு, உணவகங்கள், கழிப்பறைகள் போன்ற பயணிகள் வசதிகளும் அமைய இருக்கின்றன. அங்கிருந்தே நடைமேடைகளுக்கு செல்லும் வசதிகளும் அமைக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள், ரயில் நிலையத்திற்குள் செல்லும் பயணிகள் தனித் தனியே செல்ல பாதைகள் அமைக்கப்படுகின்றனர்.

நடைமேடைகளில் பயணிகளுக்கு பாதிப்பு இன்றி பார்சல் போக்குவரத்துக்கென தனி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக வாகன நிறுத்தகம் செல்லும் வகையில் இரண்டு நடை மேம்பாலங்கள் அமைகின்றன. ரயில்களில் வரும் பயணிகள் நேரடியாக பேருந்து நிறுத்தம் , ஆட்டோ நிறுத்தம் செல்லும் வகையில் தனி நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சாலை வாகனங்களில் வருவோர் நெரிசலின்றி எளிதாக செல்லும் விதமாக சாலைகள் அமைக்கப்படுகின்றன. மறு சீரமைப்பு பணிகள் ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீடு பசுமை தர நிர்ணய நிறுவன வழிகாட்டு தல்களின்படி நடக்கிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.