புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று (மே 17) உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் வைரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன்கள் லோகநாதன்(12), தருண்ஸ்ரீ(8). திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்த இவர்கள் இருவரும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஒலியமங்கலம் ஊராட்சி சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் உள்ள எத்தன் கண்மாயில் குளிக்க சென்றபோது எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி லோகநாதன், தருண்ஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தனர்.
லோகநாதன், தருண்ஸ்ரீ ஆகியோரது சடங்களை காரையூர் போலீஸார் மீட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் சொந்த ஊரான வைரம்பட்டியும், கண்மாய் அமைந்துள்ள ஒலியமங்கலமும் அருகருகே அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியில் குளத்தில் குளித்த நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியைச் சேர்ந்த அட்சயா(15), தனலட்சுமி(12), ஆனந்தகுமார்(29) ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவ்வாறு மாவட்டத்தில் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களோடு சேர்த்து மாவட்டம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 105 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்களை எக்காரணம் கொண்டும் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஆட்சியர் கவிதா ராமு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.