விஷச்சாராய விவகாரம் கொலை வழக்காக மாற்றம்
21 பேர் மரணமடையக் காரணமான விஷச்சாராயம் விற்பனை செய்த ஆலை அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா, ஏழுமலை மற்றும் 13 பேர் மீதான வழக்குகள் கொலை வழக்காக மாற்றம். மாநிலத்தில் 11 மெத்தனால் உற்பத்தி ஆலைகள் மற்றும் 71 மெத்தனால் பயன்படுத்தும் ஆலைகள் உள்ளன; அவற்றை ஆய்வு செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர ஆணையர்களுக்கு உத்தரவு.
கள்ளச்சாராய மரணம்; தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் ரவி!
கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன… எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்… கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது என்பதையெல்லாம் விரிவான அறிக்கையாக விரைந்து தாக்கல் செய்ய ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.
“சகிப்புத்தன்மை வேண்டும்; உணர்ச்சிவசப்படாதீர்கள் கம்பீர்!” – நீதிமன்றம் அறிவுரை
“பா.ஜ.க எம்.பி கௌதம் கம்பீர், ஐபிஎல் போட்டிகளிலேயே பிஸியாக இருக்கிறார்” என்று விமர்சித்து கட்டுரை வெளியிட்ட `பஞ்சாப் கேசரி’ என்ற இந்தி பத்திரிகைமீது கம்பீர் மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “நீங்கள் மக்கள் சேவையில் இருப்பவர். அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சகிப்புத்தன்மை வேண்டும்” என்று கூறி வழக்கை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்தது.
“ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது” – அமைச்சர் செந்தில் பாலாஜி
விஷச்சாராய மரணங்கள் குறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. இது குறித்து முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். வரக்கூடிய காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற வகையில் அரசு கவனமாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
`முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்!’ – கர்நாடக மகிளா காங்கிரஸ் ட்வீட்
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் `மாநிலத்தின் அடுத்த முதல்வர், சிவக்குமாரா… சித்தராமையாவா?’ என்ற வாத பிரதிவாதங்கள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், `கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்’ என கர்நாடக மகிளா காங்கிரஸ் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த `ட்வீட்’ அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்யபால் மாலிக்கின் முன்னாள் செயலாளர் வீட்டில் ரெய்டு!
மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக பல கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவருகிறார் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக். இவர் ஆளுநராக இருந்தபோது, பத்திரிகைத் தொடர்புத்துறை தனிச் செயலாளராக இருந்த சுனக் பாலியின் வீட்டில் சி.பி.ஐ, சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. இன்ஷூரன்ஸ் திட்டம் தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் “புகார் கொடுத்தவரையே சி.பி.ஐ துன்புறுத்துகிறது” என சத்யபால் மாலிக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதானி மீது விசாரணை – 3 மாதம் கூடுதல் அவகாசம்!
அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வைத்த குற்றச்சாட்டுகளை SEBI அமைப்பு விசாரிக்க, கூடுதலாக மூன்று மாத கால அவகாசம் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
“வெளிப்படையாக பதிலளியுங்கள்” – மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
கடலூர் மாவட்டத்தில், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய மூன்று தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
கான் திரைப்படவிழா; வேட்டி, சட்டை அணிந்து எல்.முருகன் பங்கேற்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “உலகப் புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பர்ய அடையாளமான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம்கொள்கிறேன். `ஜி 20′ மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றிருக்கும் இந்தத் தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பர்ய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்துவைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் சித்தராமையா!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வர் பதவிக்கு கே.டி.சிவக்குமார், சித்தராமையா இருவருக்குமிடையே போட்டி நிலவிவரும் நிலையில், ராகுல் காந்தியை இன்று சித்தராமையா சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது!
முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியது. 228 வனத்துறைப் பணியாளர்கள், 50 தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இந்தக் கணக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.
தொடரும் கள்ளச்சாராய வேட்டை!
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 20-ஐ தாண்டியிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கை வேகமெடுத்திருக்கிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனிப் பகுதியில் மண்ணில் புதைத்துவைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சாராயத்தை மண்ணில் புதைத்துவைத்திருந்ததாக மனோகரன், அவரின் குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேரை போலீஸார் தேடிவருகின்றனர். அதே போன்று திருவாரூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட சட்டவிரோத மது விற்பனை தடுப்புச் சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 145 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 143 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. மேலும், கள்ளத்தனமாக சாராயம் தயாரித்த இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருக்கிறார்.