தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனால் மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலி்ல் மத்திய அரசு சேர்த்தது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் தடையை எதிர்த்து தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அதற்கு விலக்கு பெற்றன.
இந்த சட்டத்துக்கு அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப்போட்டிகள் மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா, கூபா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோஸப் தலைமையில், நீதிபதிகள் அஜெய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சிடி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நாளை அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. நாளை விசாரணை நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.