விஷச்சாராய வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!

கடந்த 13.05.2023 அன்று நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 நபர்களும், செங்கல்பட்டில் 8 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும், மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷச்சாராயம் சென்னை வானகரம் ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இதை 2018ஆம் ஆண்டு வாங்கி, பின்னர் கொரோனா காரணமாக இதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போனதாலும், இவர்களது தொழிற்சாலை தீவாலான நிலையில் 1200 லிட்டர் விஷச்சாராயத்தை (200 லிட்டர் கொண்ட 6 பேரல்களில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த பரகதுல்லா (எ) ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66,000க்கு விற்பனை செய்துள்ளார். இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்தது.

மேலும், விஷச்சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷச்சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 400 லிட்டர் விஷச்சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார்.

உயிர் இழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம், கிராமப் பகுதிகளில் காய்ச்சி வடிக்கப்பட்ட கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் எரிச் சாராயமும் அல்ல. இது தொழிற்சாலைகளில் தின்னர் போன்ற பொருட்களைத் தயார் செய்ய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதாலும், இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதாலும் இவற்றை விற்பனை செய்த ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா (எ) ராஜா, ஏழுமலை விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் காவல் நிலையம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களிலுள்ள வழக்குகளை கொலை வழக்காக (302 IPC) மாற்றம் செய்யப்படுகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.