திருவனந்தபுரம் :டாக்டர்கள், நர்ஸ்கள் மட்டுமின்றி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பாதுகாவலர்கள், மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி செய்யும் சட்ட திருத்தத்துக்கு கேரள அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொல்லம் மாவட்டத்தின் கொட்டாரக்கரா என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், வந்தனா தாஸ், 22, என்ற பெண் டாக்டர் பணியாற்றி வந்தார்.
கடும் கண்டனம்:
சமீபத்தில், போலீசார் அழைத்து வந்த சந்தீப் என்ற கைதிக்கு, வந்தனா சிகிச்சை அளித்த போது, அந்த நபர் திடீரென வந்தனாவை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்தார். அங்கிருந்த போலீசார் உட்பட சில சுகாதாரப் பணியாளர்களையும் அவர் தாக்கினார்.இது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.
கேரளாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த கேரள உயர் நீதிமன்றம், மாநில அரசின் அலட்சிய போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவத்துறையில் பணியாற்றுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய, புதிய நெறிமுறைகளை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, கேரள அரசின் உயர்மட்ட குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில், கேரள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து,முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரள அமைச்சரவை நேற்று கூடியது.
பாதுகாப்பு சட்டம்:
அப்போது, கேரள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டம் இயற்ற, அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.கேரளாவில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, மருத்துவமனை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அதிக பட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட உள்ள புதிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால், வன்முறையில் ஈடுபடுவோருக்கு குற்றத்தின் தன்மையை பொறுத்து ஓராண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபாராதம் விதிக்கவும் சட்டம் இடம் அளிக்கிறது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு எதிராக வன்முறையை செய்ய முயற்சிப்பவர்கள் அல்லது துாண்டுபவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்ட திருத்தம் வழி செய்கிறது.
அதோடு, துணை மருத்துவ மாணவர்கள், மருத்துவமனையின் நிர்வாக பிரிவு ஊழியர்கள், பாதுகாவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த சட்ட திருத்தம் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சிறப்பு நீதிமன்றம் தண்டனை மற்றும் அபராத தொகை அதிகரிப்பு மட்டுமின்றி, இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் போலீஸ் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணையை விரைவாக முடிக்கவும் இந்த சட்ட திருத்தம் வழி செய்கிறது. இந்த அவசர சட்டம், கேரள கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கவர்னர் ஒப்புதலுக்கு பின், நடைமுறைக்கு வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்