சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு ஓரிரு வாரத்தில் வெளியிட எம்ஆர்பி திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு 1,021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடைபெற்றது. 25 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்ற தேர்வு முடிவுகளை ஒரு மாதத்துக்குள் வெளியிட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள் ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு எம்பிபிஎஸ் படித்து முடித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் விண்ணப்பித்தனர். கடந்த ஏப். 25-ம் தேதி தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு நடந்தது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும் (10-ம்வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்), இரண்டு மணி நேரம் கணினி வழியில் அப்ஜெக்டிவ் (கொள்குறி) வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது.
50 மதிப்பெண்கள் கொண்ட தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 20 ஆகவும், 100 மதிப்பெண் கொண்ட கணினி வழி தேர்வுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 30 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ் மொழி தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழ் மொழிதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் மற்ற விடைத்தாள் திருத்தப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்ஆர்பி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களிடம் கேட்ட போது, “எம்ஆர்பி தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வுகடினமாக இருந்ததாக மருத்துவர்கள் சொல்கின்றனர். மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேருவதை தடுக்கவே தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை மருத்துவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.அகிலன் கூறும்போது, “எம்ஆர்பி தேர்வில் தமிழ்மொழி தகுதித் தேர்வில் கேள்விகள்மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் மிகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், தேர்ச்சி மதிப்பெண்ணை 20-ல் இருந்து 15 ஆக குறைக்க வேண்டும்” என்றார்.