பி.லீலாவின் சாதனைகள்: குருவாயூரப்பன் கோயில் இருக்கும் வரை உங்களை யாரும் மறக்க முடியாது!

“உங்கள் குரல் கேட்ட பிறகே குருவாயூரப்பன் கண் விழிக்கிறான் என்றால் அதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும். காலம் உள்ளவரை, குருவாயூரப்பன் கோயில் உள்ளவரை உங்களை யாருமே மறக்க முடியாது!”

அது 2000-ம் ஆண்டு. நான் மலேசியாவில் ஒளிபரப்பாகும் ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிக்காக தமிழ் நிகழ்ச்சிகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த காலம். பழைய பாடகிகள் பலரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த வரிசையில் பாடகி ஜிக்கியை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸா தியேட்டருக்கு எதிரே உள்ள அபார்ட்மென்டில் சந்தித்தேன். அப்போது லீலா அம்மாவைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர்களை எல்லோருமே மறந்துவிட்ட நேரம்.

கலைமாமணி, ஞான கோகிலம், ஞான மணி, கலாரத்னம், கானவர்ஷிணி என்றெல்லாம் தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாப்பட்ட கம்பீர சாரீரம் கொண்ட பாடகி அவர். லீலாவின் நினைவுகள் நெஞ்சில் மோத, ஜிக்கியிடம் லீலாவின் வீட்டுத் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு வந்தேன். மறுநாளே அவரிடம் பேசி கத்திப்பாராவை அடுத்த டிஃபென்ஸ் காலனியை நோக்கிப் பயணித்தேன்.

பி.லீலா, எஸ்.ஜானகி

வழியெங்கும் அவரின் தேன்குரல் காதில் பாய்ந்து கொண்டே இருந்தன. எத்தனை எத்தனைப் பாடல்கள்! ‘தை பொறந்தா வழி பொறக்கும் (தை பொறந்தா வழி பொறக்கும்), நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் (இரும்புத்திரை), கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே, ராஜா மகள் ரோஜா மலர், நான் ராஜா மகள் (வஞ்சிக்கோட்டை வாலிபன்), வாராயோ வெண்ணிலாவோ… கேளாயோ எங்கள் கதையே… (மிஸ்ஸியம்மா), காத்திருப்பான் கமலக்கண்ணன் (உத்தமபுத்திரன்)

வீடும் வந்துவிட்டது. திருமண வாழ்க்கையில் உண்டான சிக்கலால் அந்த இசை தேவதை உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

கேரளாவின் பாலக்காடு பக்கத்தில் சித்தூர் என்ற கிராமத்தில் வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகளாக பொறயாத்து லீலா 1934-ம் ஆண்டு மே 19ம் நாள் பிறந்தார். மணிபாகவதர், பத்தமடை கிருஷ்ணா ஐயர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற மாமேதைகளிடம் இசை பயின்றவர். 12 வயதில் ஆந்திர மகிள சபாவில் கச்சேரி செய்து சுதந்திரப் போராளி துர்கா பாய் தேஷ்முக் அவர்களிடம் பாராட்டும் பரிசும் பெற்றார். தென்னிந்தியா முழுக்க கானக்குயிலாகப் பறந்து புகழ் பெற்றார். 1948-ம் ஆண்டு கங்கணம் என்ற படத்துக்குப் பாடி திரைத்துறையில் நுழைந்தார். அதன் பிறகு 1960-ம் ஆண்டுகளின் இறுதி வரை அவரது குரலே தென்னிந்தியத் திரைப்படங்களில் கோலோச்சியது.

டி.எம்.எஸ் – சுசீலா கூட்டணி போல கண்டசாலா – பி.லீலா குரல் தமிழ் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்தது. அதேபோல எம்.எல். வசந்தகுமாரி – பி.லீலா பாடிய கர்னாடக சங்கீதப் பாடல்களும் வெள்ளித் திரையை சங்கீத மேடையாக்கியது. இறுதியாக 1991-ம் ஆண்டு வெளியான ‘கற்பூர முல்லை’ படத்தில் இளையராஜா இசையில் ‘ஸ்ரீசிவசுத பதகமல…’ என்ற கடினமான முருகன் பாடலைப் பாடிக் கொடுத்தார். அத்தோடு சினிமா உலகம் அவரை மறந்து போனது.

பி.லீலா

வாசலிலேயே நின்று எங்களை வரவேற்றார். அவர் மறந்து போயிருந்த பல பாடல்களை நினைவுபடுத்தி பல கேள்விகளைக் கேட்டேன். முதல் பாடலை மயிலாப்பூர் லஸ் பகுதியில் ஆலிவர் ரோட்டில் இருந்த ஒரு கொட்டகைத் தியேட்டரில்தான் பாடினார். சர்வாதிகாரியில் கிணற்றுக்குள் இருந்து பாடுவது போல அப்போதே ஸ்பெஷல் எஃபெக்ட் கொடுத்து பாடியது.

இன்றும் எவராலும் பாட முடியாத தங்கப்பதுமை படப் பாடலான ‘வாய் திறந்து சொல்லம்மா…’ (இந்த பாடலைப் பாடும்போது 2 முறை மயக்கம் போட்டு விழுந்து விட்டாராம்), தமிழ் சினிமாவின் மிக நீண்ட பாடலான ‘ஜகம் புகழும் புண்ணிய கதை…’ பாடிய விதம் என அவரைப் பற்றிய பல தகவல்களைக் கேட்க கேட்க வியந்து போனார்; நெகிழ்ந்தும் போனார்.

தனக்குக் கிடைத்த பாடல் வாய்ப்புகளை பிற பாடகிக்கு அளித்த அவரின் பரந்த உள்ளத்தையும் பாராட்டினோம். ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் ‘சிங்கார வேலனே’ பாடலை ஜானகிக்கு பரிந்துரைத்தவர் லீலாவே. அதேபோல சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த ஜிக்கியை பாட வைக்க பலரும் தயங்கியபோது மந்திரிகுமாரியில் ‘வாராய் நீ வாராய்…’, ‘உலவும் தென்றல் காற்றினிலே…’ ஆகிய பாடல்களைப் பாடப் பரிந்துரைத்தவரும் இவரே என்கிறார்கள் திரைத்துறையினர்.

குரலில் கம்பீரம் குறையாத லீலா, பல அபூர்வத் தகவல்களைப் பகிர்ந்துவிட்டு, “நீங்கள் என்னுடைய மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பீர்கள். எல்லோருமே என்னை மறந்து விட்டார்கள் என்று நினைத்திருக்கும்போது, நீங்கள் வந்து பல விஷயங்களை நினைவுப்படுத்தினீர்கள்; நான் எப்படி நன்றி சொல்வது…” என்று தழுதழுத்தார்.

குருவாயூரப்பன்

“அம்மா, மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி சொல்ல குழந்தை கண்ணனே தலை அசைத்து ஏற்றுக்கொண்ட ஸ்ரீமந்நாராயணீயம் பாகவதத்தின் சுருங்கிய வடிவம். அதை டாக்டர் எஸ்.கே. நாயரின் வழிகாட்டலில் நீங்கள் பாடி அதுவே இன்றும் குருவாயூரில் அதிகாலை பாடப்படுகிறது. உங்கள் குரல் கேட்ட பிறகே குருவாயூரப்பன் கண் விழிக்கிறான் என்றால் அதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும். காலம் உள்ளவரை, குருவாயூரப்பன் கோயில் உள்ளவரை உங்களை யாருமே மறக்க முடியாது” என்றோம்.

கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்த பி.லீலா எங்களை வாசல் வரை வந்து வழியப்பினார். அந்தப் பேட்டி வெளியானதும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா லீலாவிடம் பேசி பழைய விஷயங்களைப் பகிர்ந்து பாராட்டி இருக்கிறார். கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருது என சில அங்கீகாரங்களைப் பெற்று இருந்தாலும் அவருக்குரிய சிறப்பு செய்யப்படவில்லை என்பதே அவர் ரசிகர்களின் வருத்தம். 2003-ம் ஆண்டில், லீலாவுக்கு ‘நாராயணீயம்’, ஞானப்பன மற்றும் ‘ஹரிநாமகீர்த்தனம்’ போன்ற உயர்ந்த பாடல்களைப் பாடியதற்காக பால சம்ஸ்கார கேந்திரம் இவருக்கு ஜன்மாஷ்டமி புரஸ்காரம் என்ற விருது வழங்கியது.

பி.லீலா

ஏற்கெனவே ஜெயலலிதாவின் முதன்முறை ஆட்சியில் லீலாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. லீலாவின் பரம ரசிகையாக ஜெயலலிதா இருந்து இருக்கிறார். அதனால் மத்திய அரசு பி.லீலாவுக்கு பத்ம பூஷண் விருதைத் தரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார் ஜெயலலிதா.

ஆனால் சோகம், அந்த கானக்குயில் தனது 76-வது வயதில் 2005-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி கின்னர லோகத்தை அடைந்தது. அவர் மறைவுக்குப் பிறகே 2006-ம் ஆண்டு லீலாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. வாங்கத்தான் அவரில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.