புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கும் முதல் வந்தே பாரத் ரயில் இதுதான். அதேபோல ஒடிசா மாநிலத்தை பொறுத்த அளவிலும் முதல் வந்தே பாரத் ரயில் இதுதான். மேற்கு வங்கத்திற்கு இது இரண்டாவது ரயில். பூரி-ஹவுராவுக்கு இடையே ஏராளமான பயணிகள் ட்ராவல் செய்கின்றனர். இவர்களுக்காக தற்போது இந்த வழித்தடத்தில் சதாப்தி ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலின் கட்டணம் ரூ.1,590 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மேம்படுத்தப்பட்ட இருக்கைக்கு ரூ.2,900ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22895 எனும் எண் கொண்ட இந்த ரயில் காலை 6.10 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்பட்டு மதியம் 12.35 மணிக்கு பூரிக்கு வந்து சேர்கிறது. அதேபோல 22896 எனும் எண் கொண்ட வந்தே பாரத் ரயில் பூரியிலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு 500 கி.மீ தொலைவை கடந்து இரவு 8.30 மணிக்கு ஹவுரா வந்து சேரும். வாரத்தில் வியாழக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த 500 கி.மீ தொலைவை காரக்பூர், பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை, கட்டாக், புவனேஸ்வர் மற்றும் குர்தா சாலை என 7 நிறுத்தங்களோடு 6.5 மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கிறது. இந்த ரயிலில் உணவுக்காக ரூ.308 மற்றும் ரூ.369 என இரண்டுவித கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று இயக்கப்படும் இந்த ரயில் நாட்டின் 16வது வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.