வாஷிங்டன்: ஐ.நா. வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2023-ல் 5.8 சதவீதமாகவும், 2024-ம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு தேவை மீட்சியடைந்து வருவது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிக வட்டி விகிதம், வெளிப்புறத் தேவையில் காணப்படும் தொய்வு நிலை ஆகியவை தொடர்ந்து நடப்பாண்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேசமயம், பணவீக்கம் 2023-ல் 5.5 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, உலகளவில் பொருட்களின் விலை மிதமான அளவில் காணப்படுவது முக்கிய காரணமாக இருக்கும். உலகப் பொருளாதாரம் 2023-ல் 2.3 சதவீதம், 2024-ல் 2.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.