சென்னையில் இன்றும் கடல் காற்று வீசும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம்தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் 29 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த போதே தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவானது. மழைக்காலத்தை போன்று அடித்து வெளுத்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் குளிர்ந்தன.
கொளுத்தும் வெயில்ஆனால் அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயலால் அடுத்த சில நாட்களிலேயே நிலைமை தலைக்கீழானது. அதி தீவிர புயலாக மாறிய மோக்கா புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடந்தது. மோக்கா புயல் கரையை கடந்த பிறகு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.
எப்போது விடுதலை?இரவு நேரங்களிலும் அதிக புழுக்கத்தையும் அனலையும் உணர முடிந்தது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
மோக்கா புயல் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தது, இந்த புயலால் காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் கடலில் இருந்து வீசக் கூடிய கிழக்கு திசை காற்று நின்றது ஆகியவையே தமிழகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்க காரணம் என கூறப்பட்டது. இந்த வேக வைக்கும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தனர் சென்னை மக்கள்.
கடல் காற்று வீசும்இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன், நேற்று காலை 11 மணிக்கு கடல் காற்று வீசியதாகவும், இதனால் சென்னையில் கடலோர நகரங்களில் உள்ள மக்களுக்கு வெயிலில் இருந்து ஓய்வு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். அவர் சொன்னப்படியே நேற்று மாலை சென்னையின் பல இடங்களில் இதமான காற்று வீசியது. இந்நிலையில் இன்றும் நல்ல செய்தியை கூறியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சென்னையில் இன்றும் அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
புறநகர் பகுதிகள்ஆனால் சென்னை நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும் என்றும் கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் 40 C வெப்பம் பதிவாகும் மாவட்டங்கள் என கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் திருவண்ணாமலையின் சில பகுதிகள், தூத்துக்குடியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் மற்றும் கரூர் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகள் ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.