கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள போவிக்கானம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(36). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவருக்கும் காசர்கோடு அருகே உள்ள ஊதுமாபாறை பகுதியைச் சேர்ந்த தேவிகா(34) என்பவருகும் சில ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது. தேவிகா பியூட்டிஷனாக உள்ளார். அவருக்கு வேறொருவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சதீஷும், தேவிகாவும் அவ்வப்போது தனியாக சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தேவிகாவுடனான தொடர்பு சதீஷின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரின் வீட்டில் பிரச்னை ஆனது.
ஆனால் தேவிகா அவ்வப்போது சதீஷை தனிமையில் சந்திக்க விரும்பி உள்ளார். இதற்கிடையே சதீஷை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி வந்துள்ளார் தேவிகா. திருமணம் மீறிய தொடர்பு தனது குடும்பத்தில் பிரச்னையை கிளப்பிய அதே சமயம், திருமணம் செய்ய வலியுறுத்தி நெருக்கடி கொடுத்த தேவிகாவால் கடும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளார் சதீஷ். ஒருகட்டத்தில் தேவிகாவால்தான் தனக்கு பிரச்னை என நினைத்து அவரை கொலைச் செய்ய சதீஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி காஞ்சாங்காடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தனிமையில் சந்திக்கலாம் என தேவிகாவை அழைத்துள்ளார் சதீஷ். லாட்ஜ் அறையில் சதீஷ் மற்றும் தேவிகா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னைவிட்டு பிரிந்து செல்லும்படி சதீஷ் கூறியுள்ளார். ஆனால், மனைவியை விவகாரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள் என தேவிகா கூறியதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் செய்த சதீஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேவிகாவின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.
தேவிகாவை கொலை செய்தபின்னர் சதீஷ் லாட்ஜ் அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ஹோஸ்துர்க் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். போலீஸார் சதீசை கைது செய்ததுடன் லாட்ஜ் அறைக்குச் சென்று தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது.
“சதீஷ் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருகிறார். தனது திருமணத்துக்கு முன்பே தேவிகாவுடன் நெருக்கத்தில் இருந்துள்ளார் சதீஷ். பியூட்டிசியன்களின் மீட்டிங் ஒன்றில் இருந்த தேவிகாவை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் சதீஷ். மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால் தேவிகாவை கொலை செய்ததாக சதீஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என போலீஸார் தெரிவித்தனர்.