கர்நாடகா முதலமைச்சர் இவர் தான்… இறங்கி வந்த டிகே சிவக்குமார், டாப் கியரில் சித்தராமையா!

மே 13ஆம் தேதி கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில்
காங்கிரஸ்
அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதலமைச்சர் நாற்காலியை விட்டுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. கடந்த 5 நாட்களாக இருவரிடமும் மாறி மாறி காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

கர்நாடகா முதலமைச்சர்

இரண்டு தலைவர்களும் கடந்த சில நாட்களாக டெல்லியில் தான் முகாமிட்டுள்ளனர். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேசினர். இந்நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் முடிவு எடப்பட்டது. முதலமைச்சர் பதவி சித்தராமையாவிற்கும், துணை முதலமைச்சர் பதவி டிகே சிவக்குமாருக்கும் வழங்கப்படுகிறது. இதற்கு இருவரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரிக்கும் போது, சித்தராமையாவின் தலைமையை ஏற்க டிகே சிவக்குமார் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

டிகே சிவக்குமார் சம்மதம்

கட்சியின் மேலிடம் சொன்ன அறிவுறுத்தல்களை ஏற்று அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கர்நாடகா மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சுழற்சி முறையில் இருவரையும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதை கட்சி மேலிடம் ஏற்கவில்லை. தற்போதைய சூழலில் துணை முதலமைச்சர் நாற்காலி உடன் முக்கிய துறைகளையும் டிகே சிவக்குமாருக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குருபா vs ஒக்கலிகா

இரண்டு தலைவர்களும் இரு சமூகங்களின் பிரதிநிதிகளாக திகழ்வதால், சமூக ரீதியிலும் அதிருப்தி ஏற்படாமல் பார்த்து கொள்ள கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக கர்நாடகா மாநிலத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. டெல்லியில் இந்தியா டுடே செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிகே சிவக்குமார், கட்சியின் நலனுக்காக சித்தராமையா முதலமைச்சரானால் என்ன தவறு எனக் கேட்டு விட்டு சென்றார்.

வதந்தி பரப்பும் பாஜக?

இந்த ஒரு விஷயமே அவர் சமாதானம் அடைந்துவிட்டார் என்பதை உறுதி செய்துவிட்டது. இதற்கிடையில் பாஜக தரப்பில் இருந்து சில கட்டுக்கதைகளை பரப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிகே சிவக்குமார் மிகவும் கோபமாக இருப்பதாகவும், கார்கே உடனான சந்திப்பில் சித்தராமையா குறித்து சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்பட்டது.

வரும் 20ஆம் தேதி பதவியேற்பு

கடந்த 2018ல் நடந்த தேர்தலில் சித்தராமையா தலைமையில் தான் காங்கிரஸ் தோற்றது. இதையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும் எனப் பேசியதாக சிலர் கொளுத்தி போட்டுள்ளனர். இவை அனைத்தும் முற்றிலும் பொய் என்று காங்கிரஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வரும் 20ஆம் தேதி பெங்களூருவில் புதிய முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.