ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில், பூபதியேஸ்வர கோனா அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனா அருவிக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு குழுவினருடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்கு பின், 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில், தண்ணீரில் மூழ்கி பலியான 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களான மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.