திருவண்ணாமலை : ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த பானையை போலீசார் எடுக்கச் சென்றபோது, அப்பெண், “என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை ஒண்ணும் பண்ணாதீங்க..” என சாராயத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அடுத்தடுத்து 14 பேர் இறந்தனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, போலீசார் மாநிலம் முழுவதும் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்களை பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விஷச் சாராயம் காய்ச்சுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் இதுவரை சாராயம் காய்ச்சிய மற்றும் சாராயம் விற்பனை செய்த பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் வடுகசாத்து பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது மீனா என்கின்ற பெண்மணி அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பின் மூலம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவலர்கள் அந்தப் பெண்மணியை கைது செய்து அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த பானையை போலீசார் எடுக்கச் சென்றபோது, அப்பெண்மணி, “என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை ஒண்ணும் பண்ணாதீங்க..” என சாராயத்தை எடுக்க விடாமல் காவலர்களிடம் கெஞ்சியுள்ளார்.
ஆரணி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 600 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. ஆரணி அருகே பெண்மணி வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.