ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி ‘ஜல்லிக்கட்டு’ என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ள நிலையில் பாஜக மாநில அண்ணாமலை ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடந்த காலங்களில்
எடுத்த நடவடிக்கையையும், பாஜக எடுத்த ஆதரவான நடவடிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது; தமிழகத்தின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க எடுக்கப்பட்ட விடாமுயற்சிக்காக பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மற்றும் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
* 2014 மே மாதம் ஜல்லிக்கட்டு மீதான தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தபோது, காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் அந்த தீர்ப்பை வரவேற்று “காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு” முடிவுக்கு வந்தது என்றார்.
* 2015 டிசம்பரில், முன்னாள் பிரதமரும், அப்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான மன்மோகன் சிங், மனிதநேய சங்கத்தின் கடிதத்திற்கு அளித்த பதிலில், ஜல்லிக்கட்டை ஊக்கப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
* 2016 ஜனவரியில், பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது; இருப்பினும் அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
* ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 2017 ஜனவரியில் பல வற்புறுத்தலுக்கும், ஆலோசித்தலுக்கும் பிறகே அது செய்யப்பட்டது.
* மே 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கலாசாரத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்புதான் அது. இன்று அந்த அவலங்களையெல்லாம் மறைக்கவே திமுகவுடன் காங்கிரஸ் இருந்து வருகிறது
* 2022 டிசம்பரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜல்லிக்கட்டு தடை நீக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் வழக்கின் ஒவ்வொரு அம்சமும் மத்திய அரசு அளித்ததாக கூறினார்.
* குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர். கர்நாடக சட்டசபை தேர்தலில் சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்திருந்தார். ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தியிடம் சௌமியா ரெட்டி தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணி கட்சிகளாலும் தமிழக மக்களை இனி ஏமாற்ற முடியாது.
* ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதல் இன்று வரை யாரேனும் நின்றிருந்தால் அது நமது பிரதமர் நரேந்திர மோடிதான்.
என அண்ணாமலை கூறியுள்ளார்.