தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் விலங்குகளை காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விலக்கு பெற சிறப்பு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமைதான அரசியல் சாசன அமர்வின் முன்பு நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா இயற்றிய சிறப்பு சட்டங்கள் செல்லும் என தீர்ப்பு வழங்கியதை அடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடை நிரந்தரமாக நீங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாண்புமிகு அம்மா அரசின் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலமாக இன்றைக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
“ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று சட்டமன்றம் அறிவித்துள்ள நிலையில், நீதித்துறை மாறுபட்ட கருத்தை எடுக்க முடியாது” என்கிற அஇஅதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்தை வரவேற்பதுடன், நமது கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற அஇஅதிமுக அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பல்வேறு முறை வலியுறுத்தியதன் காரணமாகவும், கழக ஆட்சிக்குப் பின்னரும் அஇஅதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு எடுத்த அனைத்து சட்டபோராட்டங்களுக்கும் துணை நின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என பதிவிட்டுள்ளார்.