புதுடெல்லி: கிரண் ரிஜிஜு ஒரு தோல்வி அடைந்த சட்ட அமைச்சர் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதிக முக்கியத்துவம் இல்லாத புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்டத் துறை, அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிரண் ரிஜிஜுவிடம் இருந்து சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி மாணிக் தாக்கூர், “கிரண் ரிஜிஜு ஒரு தோல்வி அடைந்த சட்ட அமைச்சர். அவரால் புவி அறிவியல் துறையில் என்ன செய்ய முடியும்? புதிய சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்ஜூன் ராம் மேக்வால், முதிர்ந்த அணுகுமுறை கொண்டவராக இருப்பார் என நம்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.
சட்ட அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சட்ட அமைச்சரான கபில் சிபல், “கிரண் ரிஜிஜு தற்போது சட்ட அமைச்சர் அல்ல; புவி அறிவியல் துறை அமைச்சர். சட்டத்தின் பின்னால் இருந்த அறிவியலை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. வாழ்த்துகள் கிரண் ரிஜிஜு” என்று தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதானி – செபி இடையேயான வழக்கு ஆகியவையே கிரண் ரிஜிஜுவிடம் இருந்து சட்டத் துறை பறிக்கப்பட காரணம் என சிவசேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
சட்ட அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி சட்ட அமைச்சராக பதவியேற்றவர் கிரண் ரிஜிஜு. பதவியேற்று 2 ஆண்டுகள்கூட இன்னும் நிறைவடையாத நிலையில், அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு முக்கியத்துவம் குறைந்த துறைக்கு மாற்றப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.