சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை நேற்று மெட்ரோ ரயில்வே மேலாண் இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.
இந்த வசதியை குறித்து அவர் பேசியதாவது, “மெட்ரோ நிர்வாகம் பயணிகள் டிக்கெட் பெற பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. தற்போது மெட்ரோ டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி எடுக்கப்படும் டிக்கெட் ஒரு நாள் முழுவதும் செல்லும். டிக்கெட் பயணம் தொடங்கியதில் இருந்து 2 மணி நேரத்தில் காலாவதியாகும். நேரம் கடந்து பயணிக்கும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும்.
வாட்ஸ்அப் மூலம் ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகள் வரை பெறலாம். அந்த 6 டிக்கெட்டுகளுக்கும் தனித்தனி QR வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிக்கெட்டுகளை யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து பயணிக்க முடியும். ஒருவேளை சர்வர் பிரச்னையால் வாட்ஸ்அப் மூலம் பெற்ற டிக்கெட் கொண்டு பயணிக்க முடியவில்லை என்றால், அந்தப் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்கு பயணிக்கூடிய இலவசம் மற்றும் கட்டண சலுகையிலான ‘புரமோஷனல் டிக்கெட்’ வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.3,000 கோடி வரை தேவைப்படும். தற்போது மெட்ரோ ரயில்கள் நான்கு பெட்டிகளோடு இயங்கி வருகிறது. அத்துடன் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்கும் திட்டத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.
மெட்ரோவின் நிகர லாபம் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னால் மின்சார கட்டணமும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால் வரவும் செலவும் சரிசமமாக உள்ளது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் உள்ளோம். அதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னர் பணிகளை தொடங்குவோம். அதுபோல சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான பணிகளும் அரசு ஒப்புதல் பெற்ற பின்பு தொடங்கப்படும். மேலும் Paytm மற்றும் ஏர்டெல் நிறுவன அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் பெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.