அடுத்த வாரம் முதல் மருந்து வகைகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம் – சுகாதார அமைச்சர்

அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 மருந்து வகைகளின் விலைகளை குறைக்கக் கூடிய பெறுமானம் தொடர்பாக நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணக்காளர் பிரிவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பட்டார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு நேற்று (17) பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 டொலரின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மருந்து வகைககளின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்தன. எனவே, டொலர் பெறுமதி வீழ்ச்சியடைவதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மருந்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டுக் காணப்படும் விற்பனை நிலையங்கள் கட்டாயமாக குளிரூட்டி வைத்திருக்க வேண்டும். இதனால் மிக அதிகமான மின் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக, மருந்து விற்பனையாளர்கள் கவலையடைவதாகக் கூறிய அமைச்சர் மருந்து விலையைக் குறைக்கும் போது இவ்விடயம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.