பெங்களூரு,
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரி யார் என்பதில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதற்காக இரு தலைவர்களும் டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கு முன் காங்கிரஸ் மேலிடம் பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இதில் முடிவாக அடுத்த முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இருவரும் தலா 30 மாதங்கள் முதல் மந்தியாக செயல்படுவார்கள் என்றும், முதல் 30 மாதங்கள் சித்தராமையாவும், அடுத்த 30 மாதங்கள் டி.கே.சிவகுமாரும் முதல் மந்திரியாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமாருக்கு அதிகபட்சமாக 6 இலாகாக்கள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவை அனைத்தும் இன்று மாலை நடைபெறவுள்ள சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை பொது வெளியில் அறிவித்தால் குழப்பங்கள் ஏற்படும் என்றும், சட்டமன்ற குழுவில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரிவிப்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இன்று மாலை இது தொடர்பான தகவல்கள் வெளியாக உள்ளது.