கிரண் ரிஜிஜூ மாற்றம்… அப்படியென்ன சட்ட சிக்கல்? அமைச்சரவையில் கைவைத்த பிரதமர் மோடி!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசிற்கு அடுத்த அக்னி பரீட்சை இன்னும் ஓராண்டில் வரவுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி அலை வேலை செய்யுமா? இந்துத்துவா அரசியல் எடுபடுமா? ராமர் கோயில் மக்களின் வாக்குகளை பெற்றுத் தருமா? தெற்கு நட்டாற்றில் தவிக்க விட்ட நிலையில் வடக்கு கரைசேர்க்குமா? போன்றவை மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கின்றன.

மோடி அமைச்சரவையில் மாற்றம்

இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை செய்துள்ளார் பிரதமர் மோடி. அதன்படி,
சட்டத்துறை அமைச்சர்
ரிஜிஹூவை புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் சட்டத்துறைக்கு அர்ஜுன் ராம் மேக்வால் இணையமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புவி அறிவியல் துறை ஒதுக்கீடு

இவர் வசம் ஏற்கனவே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், கலாச்சாரத்துறை இணையமைச்சர் ஆகிய பொறுப்புகள் இருக்கின்றன. முன்னதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் புவி அறிவியல் துறை இருந்தது கவனிக்கத்தக்கது. இதில் ரிஜிஜூ மாற்றம் தான் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த மே 2019 முதல் ஜூலை 2021 வரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சராக இருந்தார்.

கொலிஜீயம் சர்ச்சை

ஜூலை 8, 2021ல் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் மே 18, 2023ல் புதிய மாற்றத்திற்கு ஆளாகியுள்ளார். சட்டத்துறை என்றால் நீதிமன்ற விவகாரங்களும் அதனுள் அடங்கும். தற்போது நாடு முழுவதும் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வழக்குகளில் தீர்வு எட்டப்படாமல் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்சினையே காரணம் எனக் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

தற்போது கொலிஜீயம் என்ற அமைப்பு தான் நீதிபதிகள் நியமனத்தை பார்த்து கொண்டிருக்கிறது. இதில் மத்திய அரசின் பங்கு குறைவாக தான் உள்ளதாக சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதிகள் தரப்பில் இருந்து எதிர் கருத்துகள் வர ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி எடுத்த முடிவு

தலைமை நீதிபதி தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தும், பிறப்பிக்கும் உத்தரவும் மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு ஏதேனும் ஒரு வகையில் நெருக்கடியாக மாறியதாக சொல்லப்பட்டது. கடைசியில் சட்டத்துறை என்ன தான் செய்து கொண்டிருக்கிறது என முழு பார்வையும் அமைச்சர் கிரண் ரிஜுஜூ பக்கம் திரும்பியது. இவை அனைத்தும் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.