மே 20 ஆம் தேதி நாட்டில் சில முக்கிய நிகழ்வுகள் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அந்த நாளுக்கு குறி வைத்துள்ளன. இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளை பெற்று பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வராக யார் பொறுப்பேற்க போகிறார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
முதலமைச்சர் அரியணையில் டி.கே.சிவக்குமார் ஏறுவார் என்று ஒரு தரப்பினரும், மறு தரப்பில் சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 20 ஆம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடக்கவுள்ளது.
அந்த நிகழ்ச்சிக்கு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு மே 20 ஆம் தேதி மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. பாரளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் மெகா கூட்டணி உருவாக இருப்பதாகவும் அரசியல் அரங்களில் பேசப்பட்டு வருகிறது. அது உண்மையென்றால் அதற்கான அஸ்திவாரம் தொடங்கும் நாளாக மே 20 அமையும்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் மே 20 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அன்றைய தினம் பெங்களூருவுக்கு செல்ல இருப்பதால் செயல் திட்ட குழு பிளான் மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மே 20 ஆம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார். கர்நாடகாவில் நடக்கும் பதவியேற்பு மற்றும் ஸ்டாலின் விசிட் ஆகிவற்றை திசை திருப்ப அண்ணாமலை இந்த திடீர் போராட்டத்தை அறிவித்திருப்பதாக விமர்சிக்கின்றனர்.