தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மறைமுக தடை விதிக்கக்கூடாது என்றும், மேற்குவங்கத்தில் விதித்த தடையை நீக்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எவ்விதத்திலும் தடையும் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.
அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் திரையரங்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதே போன்று மேற்குவங்கத்திலும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மாநில அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாக மேற்குவங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும் போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.
newstm.in