ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி.!
திருநெல்வேலி மாவட்டத்தில் சந்திப்புப் பகுதியில் இருந்து, டவுனுக்குச் செல்லும் வழியில் உள்ள திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி இந்தப் பாலத்தின், பக்கவாட்டுச் சுவரில் இருந்து ஒரு பெரிய கல் ஒன்று பெயர்ந்து விழுந்தது.
இதில், வீட்டுத் தேவைக்கு பால் வாங்குவதற்காக மொபட்டில் வந்த கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைற்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரடுக்கு மேம்பாலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளதால் உயிரிழந்தவரின் உறவினர்கள் ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.