புதுச்சேரியில் அங்கன்வாடிகளுக்கு மளிகை, காய்கறிகள் வாங்குவதில் மோசடி: தலைமைச் செயலரிடம் புகார்

புதுச்சேரி: அங்கன்வாடிகளுக்கு தேவையான மளிகை, காய்கறி, முட்டை விநியோகத்தை செய்து வந்த புதுச்சேரி சுய உதவிக் குழுக்களை நிறுத்தி விட்டு வடலூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் இல்லாமல் மாதம் ரூ.49 லட்சம் பொருட்களை வாங்குவது தொடர்பாக விசாரணை நடத்துமாறு தலைமைச் செயலரிடம் ஏஐடியூசி மனு தந்துள்ளது.

புதுச்சேரி தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவைச் சந்தித்து ஏஐடியூசி மாநில பொதுச்செயலர் சேது செல்வம், மாநிலத்தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவத் தலைவர் அபிஷேகம் மற்றும் நிர்வாகிகள் இன்று அளித்த மனு: ”புதுச்சேரி மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் 855 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. மாஹே , ஏனாமில் 22 அங்கன்வாடிகளும் புதுச்சேரி காரைக்காலில் 833 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு, முதியோர்களுக்கு முட்டை , கேழ்வரகு, புட்டு, கடலை, காய்கறி சாதம் ஆகியவை அங்கன்வாடி மூலம் சமைத்து வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, வெள்ளம், கேழ்வரகு, காய்கறி,முட்டை ஆகிய பொருட்களை புதுச்சேரியை சேர்ந்த சுய உதவி குழுக்கள் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதனை திடீரென நிறுத்திவிட்டு 2022-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 49,03,650 மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்து வருகிறார்கள். ஆனால், இரண்டரை லட்சத்திற்கு மேல் பொருள்களை வாங்க வேண்டுமென்றால் டெண்டர் முறையில் வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும் இதனை பின்பற்றாமல் ஆட்சியாளர்களுக்கு அனுசரணை செய்யக்கூடிய வடலூரைச் சேர்ந்த வியாபாரியை தேர்ந்தெடுத்து பொருள்கள் சப்ளை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

குறிப்பாக, பாசிக் நிறுவனத்தை இதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அங்கன்வாடிகளுக்கு தேவையான பொருட்களை வடலூரைச் சேர்ந்த நிறுவனம் நேரடியாக சப்ளை செய்து வருகிறது. அரசிடம் இருந்து இதற்கு உண்டான பணத்தை பெறுவதற்கு பாசிக் நிறுவனம் சப்ளை செய்தது போல் சம்பந்தப்பட்ட துறைக்கு பில் அனுப்பப்பட்டு பணம் பெறப்பட்டு வருகிறது. இதற்காக, பாசிக் நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் இரண்டு சதவீதம் கமிஷன் கொடுத்து வருகிறார்கள். இதனால் பாசிக் நிறுவனத்துக்கு பெரிதாக லாபம் எதுவும் இல்லை. எனவே, இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் டெண்டர் இல்லாமல் நேரடியாக கொடுக்கும் முறையை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் மூலம் டெண்டர் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் ஒப்பந்தம் செய்த ஏழு மாதத்தில் கடந்த மூன்று மாத காலமாக குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முட்டை, கேழ்வரகுபுட்டு, கடலை, காய்கறி சாதம் எதுவும் வழங்கப்படவில்லை. இதை நம்பி உள்ள குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே உடனடியாக சத்துணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே மனு நகல் நிதித் துறைச்செயலருக்கும் தரப்பட்டதாக தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.