சென்னை: திராவிட மாடல் என்பது பாட்டாளிகளுக்கான அரசு , உழைக்கும் மக்களுக்கான அரசு. தொழிலாளர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது. தொழிலாளர்களுடன் எப்போதும் நட்பு கலந்த மோதல் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொமுச) 25-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
தொழிலாளர் அணியுடன் எப்போதும் எனக்கு ஒரு நட்பு கலந்த மோதல் உண்டு. மோதலும் சொல்லலாம். ஊடலும் சொல்லலாம். ஆனால் மோதலாக இருந்தாலும் ஊடலாக இருந்தாலும் எப்போதும் உங்களுடன் நான் கூடலாகத்தான் இருப்பேன். என்ன மோதல், ஊடல் என சொல்கிறேன் என்று சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். என்னவென்று கேள்வி எழலாம்.
தொடக்க காலத்தில் திமுகவின் தலைமைக்கழகம் வட சென்னை ராயபுரத்தில் இருக்கும் அறிவகத்தில் செயல்பட்டு வந்தது. அதற்கு பிறகு அன்பகம். அறிவாலயத்தை கட்டி முடித்த பிறகு தலைமக்கழகம் அங்கு மாற்றப்பட்டது. அப்போது அன்பகத்தை தொழிலாளர் அணிக்கு பயன்படுத்த தர வேண்டும் என்று அவர்கள் தரப்பில் இருந்து வந்தது. இளைஞர் அணி செயலாளராக இருந்த நான் இளைஞர் அணிக்கு பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்று என் பக்கத்தில் இருந்து தலைமைக்கு கோரிக்கை வைத்தோம்.
அப்போது கருணாநிதியும், அன்பழககனும் நீங்கள் இரண்டு அமைப்பு மட்டும் இல்லை. மற்ற அமைப்புகளும் கேட்டு இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறோம். 10 லட்ச ரூபாயை திரட்டிக் கொண்டு யார் முதலில் எங்களிடத்தில் தருகிறார்களோ..அவர்கள் அதை பயன்படுத்த அனுமதி தருகிறோம் என்று சொன்னார்கள். தொழிலாளர் அணியுடன் போட்டி போடுவது சாதாரண விஷயம் அல்ல. முயற்சித்தோம். வெற்றியும் கண்டோம்.
என்னை பொறுத்தவரை நான் இப்ப்போது நினைப்பது எல்லாம்,, இளைஞர்கள் சோர்ந்து விடக்கூடாது என தொழிலாளர் அணி விட்டு கொடுத்து இருக்கலாம் என்றுதான் எனக்கு எண்ண தோன்றுகிறது. தொழிலாளர் நல வாரியங்களில் கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்காத 1 லட்சம் மனுக்களுக்கு பதில் கிடைத்துள்ளது. ஜவுளி கடையில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி வைக்க வேண்டும் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த ஒரு அறிவிப்பாகும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் ஊதிய முரண்பாடு களைந்து 5 விழுக்காடு ஊதிய உயர்வையும் ஊதிய அட்டவணை முறையையும் அளித்து இருக்கிறோம். திராவிட மாடல் என்பது பாட்டாளிகளுக்கான அரசு , உழைக்கும் மக்களுக்கான அரசு. தொழிலாளர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது” என்றார்.