புதுச்சேரி: “கலால் துறையில் நடக்கும் ஊழலை தடுக்க தவறிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும்” என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலுக்கு இன்று மாலை புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது குடும்பத்துடன் வந்தார். ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவர் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். போகர் சந்நிதியில் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிப் பெற்று, ஒன்றரை ஆண்டுகள் ஆட்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை பாஜக ஏற்படுத்தியது. அந்த மூன்றரை ஆண்டுகள் பாஜக ஆட்சியில் கர்நாடகா மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை.
இளைஞர்கள், மகளிருக்கான திட்டங்கள் இல்லை. அதனால் மக்கள் பாஜக ஆட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். படித்த இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,000, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி போன்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால், பாஜக.வினர் மக்களுக்கு செய்த சாதனைகளை சொல்லாமல், பொய் பிரசாரம் செய்தனர். மதத்தை உள்ளே கொண்டு வந்து மதத்தின் மூலமாக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டனர். இருந்தும் கர்நாடகா மக்கள் மிக தெளிவாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்து 9ஆண்டுகளாகி விட்டது. ஊழலை ஒழிப்பேன் என்பது அவரின் பொய் வாக்கு. விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஐ தாண்டியுள்ளது. கள்ளச் சாராய விற்பனையில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக புதுச்சேரியில் கள்ளச் சாராயம் பெருகி வருகிறது. இங்கிருந்து தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது என்று கூறினேன். ஆனால், இது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எந்த கவலையும்படவில்லை.
அது சம்பந்தமாக நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி கலால் துறையில் மிகப் பெரிய ஊழல் உள்ளது. நான் முதல்வராக இருந்தபோது 400 மொத்த மற்றும் சில்லரை மது விற்பனையகங்கள் இருந்தன. ஆனால், தற்போது 900 மது விற்பனையகங்கள் உள்ளன. குடித்து விட்டு கும்மாளம் போடும் களமாக தற்போதைய முதல்வர் மாற்றியிருக்கிறார். 24 மணி நேரமும் மதுக்கடைகள் திறந்திருக்கிறது. கோயில், பள்ளிகள், குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் இருக்க கூடாது என்று போராடி வருகிறோம். நான் புதுச்சேரியை சேர்ந்தவன் என்ற முறையில், இங்கிருந்து சாராயம் கடத்தப்பட்டு தமிழக மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், புதுச்சேரி முதல்வரோ கலால் துறை, காவல் துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோடி கணக்கில் லஞ்சம் கிடைப்பதால் புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார். கலால்துறையில் ஊழலை தடுக்க தவறிய என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரி முதல்வர் பதவி விலக வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.