பெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
பெங்களூருவில் உள்ள ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து இருவரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். முன்னதாக, சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து டி.கே.சிவக்குமார் ஆளுநரின் காலை தொட்டு ஆசி வாங்கினார்.
ஆட்சியமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து பதவியேற்க ஆளுநர் முறைப்படி இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் அதாவது மே 20ம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் பங்கேற்கும் என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.