திருநெல்வேலி: தமிழக தொல்லியல் துறை சார்பில் திருநெல்வேலியில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் உலக தரத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் கட்டுமான பணிகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் நாகரிக தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்க கால பாண்டியரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தை சேர்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
இதற்காக திருநெல்வேலியில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 5.276 ஹெக்டேர் (13.02 ஏக்கர்) நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அருங்காட்சியக கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.
இந்த அருங்காட்சியக வளாகத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் நிர்வாக கட்டிடம் என 4 முதன்மைப் பிரிவுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. முற்றங்கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் இப்பகுதியின் வட்டார கட்டிட கலை தன்மையை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள், முகப்புகளில் உள்ளூர் கலை மற்றும் கைவினை திறனின் கூறுகளை பயன்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் மொத்த கட்டிட பரப்பு 54,296 சதுர அடி. அருங்காட்சியக சிற்றுண்டிச்சாலை, கைவினை பொருட்கள் பட்டறை, கழிப்பறைகள், வாகன நிறுத்தும் வசதி, நுழைவு வாயில்கள், சுற்றுச்சுவர்களும் அமைக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தில் திறந்தவெளி பகுதிகளில் உள்ளூர் தாவர வகைகளை நட்டுவைத்து இயற்கை தோட்டமும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி அருங்காட்சியகம் அமையவுள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, அமைச்சர் ராஜ கண்ணப்பன்,திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., மு. அப்துல்வகாப் எம்.எல்.ஏ., திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.