திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் டைமிங் போட்டியால் அதிவேகத்தில் பேருந்தை இயக்கி பெண் ஒருவரின் கால்கள் நசுங்க காரணமாக இருந்த தனியார் பேருந்து ஓட்டுனரை பயணிகள் விரட்டி பிடித்து நையப்புடைத்தனர்…
தனியார் பேருந்து ஏறியதால் கால்கள் இரண்டும் நசுங்கிய நிலையில் பெண் ஒருவர் கதறிக் கொண்டிருக்கும் இந்த விபத்து அரங்கேறிய இடம் திருச்சி மத்திய பேருந்து நிலையம்.
இங்கு தனியார் பேருந்துகளுக்கிடையே யார் முந்திச்செல்வது என்ற போட்டி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. போட்டிகளை தடுக்க டைம் கீப்பர் இருந்தாலும் ஓட்டுனர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற கூடுதல் ஊக்கத்தொகைக்காக பேருந்து நிலையத்துக்குள் ஆக்சிலேட்டரை மிதித்துக் கொண்டே பயணிகளை ஏற்றுவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். அந்தவகையில் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் KHT என்ற தனியார் பேருந்து, மற்றொரு பேருந்தை முந்திச் செல்வதற்காக அதிவேகமாக கிளம்பியது.
அப்போது துவாக்குடியை சேர்ந்த நிர்மலா என்ற பெண் அந்த பேருந்தின் முன்வாசல் வழியாக ஏற முயன்றனர். பேருந்து ஒட்டுநர் பயணிகளை கவனிக்காமல் பேருந்தை வேகமாக எடுத்ததால் வாசலில் நின்ற நிர்மலா தவறி கீழே விழுந்தார் . அவரது இரு கால்களிலும்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதனால் கால்கள் இரண்டும் நசுங்கின.
எழுந்திருக்க இயலாமல் நிர்மலா கூச்சலிட்டதை கண்டு அதிர்ந்து போன பயணிகள் அதிவேகமாக பேருந்தை ஓட்டி பெண்ணின் கால்கள் நசுங்கி சிதைய காரணமாக இருந்த, ஓட்டினரை விரட்டி விரட்டி அடி வெளுத்தனர்..
தப்பிச்செல்ல முயன்றதால் அவரது சட்டையை பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு நையப்புடைத்தனர்.
அங்கிருந்த பயணிகள் நிர்மலாவை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காந்தி மார்க்கெட் போலீசார் ஓட்டுனரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் அதிவேக அடாவடிகளை தொடர்ந்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ள பயணிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கேட்டுக்கொண்டுள்ளனர்.