புதுடில்லி :”புதுடில்லியில் போக்கு வரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் துவாரகா எட்டு வழி உயர்மட்ட சாலை பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிவடையும்,” என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் முதல் உயர்த்தப்பட்ட எட்டு வழி நகர்ப்புற விரைவுச் சாலையாக, துவாரகா விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
புதுடில்லி — ஹரியானாவின் குருகிராம் இடையிலான இந்த உயர்மட்ட விரைவுச் சாலை, புதுடில்லி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் தங்க நாற்கரச் சாலையின் ஒரு பகுதியாக அமைக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை – 8ல், ஷிவ் மூர்த்தி என்ற இடத்தில் இருந்து துவங்கி, குருகிராம் எல்லையில் உள்ள துவாரகா செக்டார் 21 வழியே செல்லும் விரைவுச் சாலை, கெர்கிதவுலா சுங்கச்சாவடி அருகே முடிவடைகிறது. இது 9,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 29 கி.மீ., நீளமுள்ள இந்தச் சாலையில் 19 கி.மீ., ஹரியானாவிலும், மீதமுள்ள 10 கி.மீ., புதுடில்லியிலும் அமைகிறது.
விரைவுச் சாலை அமைக்கும் பணிகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, புதுடில்லி கவர்னர் வினய் குமார் சக்சேனா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது நிதின் கட்கரி கூறியதாவது:
முழுவீச்சில் நடந்து வரும், இந்த துவாரகா உயர்மட்ட விரைவுச் சாலையின் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நிறைவடையும்.
இந்த சாலையில், தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை செயல்பாட்டில் இருக்கும். சாலையின் இருபுறமும் மூன்று வழி சேவைச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இது, புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையம் செல்ல மாற்று இணைப்பு சாலையாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, துவாரகாவின் செக்டார் 25ல் வரவுள்ள இந்திய சர்வதேச மாநாட்டு மையத்துக்கு, நேரடியாக விரைவில் செல்லும் வகையிலும் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
‘சிசிடிவி’ கேமராக்கள் கண்காணிப்பு, அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் போன்ற உலகத் தரம் வாய்ந்த சிறப்புகளும் இந்த சாலையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்