ராமேசுவரம்: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தன.
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் 2009 மே 18-ல் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இதன் 14-ம் ஆண்டு நினைவையொட்டி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணில் நினைவேந்தல் நிகழ்ச்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கூட்டமைப்பு சார்பாக நேற்று நடந்தது. நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு தொடங்கியது.
அப்போது வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதேபோன்று மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.