தலைநகர் சென்னையில் சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். அனல் தகிக்கும் கோடையால் மக்கள் திணறி வரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் விதமாக அமைந்திருக்கிறது மின்வெட்டு. தலைநகரின் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியிருப்பதாக சமூகவலைதளங்களில் கொதிக்கிறார்கள் சென்னைவாசிகள்.
”மின் கம்பங்களில் அணில்கள் ஓடுவதால் தான் அதிகளவில் மின் தடை ஏற்படுகிறது” என முன்னொரு தருணத்தில் தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இப்போதோ, “தமிழகத்தில் இருப்பது மின்வெட்டு இல்லை… மின்தடை” என புதிய விளக்கத்தைத் தந்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
தலைநகரில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியுள்ளது வெப்பம். இரவிலும் புழுக்கம் அதிகரித்தபடியே காணப்படுவதால் ஃபேன், ஏ.சி போன்ற இயந்திரங்கள் அத்தியாவசிய தேவையாகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தரமணி, திருவொற்றியூர், கொளத்தூர், போரூர், ஹாபர்கான்பேட்டை, வியாசர்பாடி, மேற்கு சைதாப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், ராயபுரம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளிலும் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை, பல்லாவரம், பொத்தேரி மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நம்மிடம் பேசிய சென்னைவாசிகள் சிலர், “இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு பிரச்னை இருக்கிறது. சில வேளைகளில் காலையில் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வெட்டு ஏற்படாவிட்டாலும் சீரான மின் விநியோகம் இல்லாமல் (fluctuation) இயந்திரங்கள் செயல்படாத நிலை ஏற்படுகிறது. மின்வெட்டு குறித்து எந்த தகவலும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. சில நேரம் 45 நிமிடத்தில் வந்துவிட்டாலும் சில இடங்களில் 3 மணி நேரம் ஆகிறது. இதனால் மிகுந்த அவதிப்படுகிறோம்” என வேதனை தெரிவித்தனர்.
மின்சார வாரிய அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது “சென்னையை பொறுத்தவரை அதிக மின்நுகர்வு காரணமாக மின்னழுத்தம் ஏற்படுகிறது, சில இடங்களில் மின்தடை ஏற்பட இதுவே காரணம். மின் அழுத்தம் ஏற்பட்டாலும் உடனடியாக சரிசெய்திடக் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்நுகர்வு அதிகரித்துள்ளது. 4016 மெகாவாட் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நாளுக்கு நாள் கூடும் என எதிர்பார்க்கிறோம். தலைநகரில் கேபிள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. மின் தேவைகள் அதிகரித்துள்ளதால் பழைய கட்டமைப்பு மின் கேபிளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்த பகுதிகளெல்லாம் கேபிள் மாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறதென ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மாற்றம் செய்யப்படும்.
தற்போது ஏற்படுவது மின்வெட்டு அல்ல, மின்தடை. மின்வெட்டு என்றால் பற்றாக்குறை ஏற்பட்டு மின்சார வாரியத்தால் மின் விநியோகம் நிறுத்தப்படுவது. மின்தடை என்பது பராமரிப்பு பணிகளுக்காகவும், கேபிள் கோளாறு போன்றவற்றால் மின்சாரம் தடைப்படுவதாகும், போதிய மின்சாரம் மின்சார வாரியத்திடம் உள்ளது. அதேசமயம் மின் விநியோகத்தில் பிரச்னை இல்லை எனச் சொல்லவில்லை. மின்நுகர்வு அதிகரிப்பதால் கேபிளில் பழுது ஏற்படுவதே மின்தடைக்கு காரணம். சென்னை 5, 6 இடங்களில் மட்டுமே பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது உடனடியாக இரவே கேபிள் மாற்றப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்படுகிறது” என்றார்.
”கோடைக் காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பது அடிப்படையான விஷயம். இரவில் புழுக்கம் அதிகரிப்பதால் ஏ.சி பயன்பாடு அதிகரிக்கும் என்பதும் ஊரறிந்த விஷயம். அதிகப்படியான மின்நுகர்வால் மின்வெட்டு ஏற்படுகிறது என்ற காரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கேற்றவாறு முன்னேற்பாடுகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திருக்க வேண்டாமா….” என வினவுகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்.
வரும் நாட்கள் என்ன ஆகுமோ என புலம்புகிறார்கள் சென்னைவாசிகள். உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா தமிழ்நாடு மின்சார வாரியம்… கூடுதல் கவனம் செலுத்துவாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?!