மறைந்த எலிசபெத் ராணியாரின் இறுதிச்சடங்குகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி என செலவிடப்பட்ட மொத்த தொகை தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 161.7 மில்லியன் பவுண்டுகள்
கடந்த செப்டம்பர் மாதம் ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானார். அவரது இறுதிச்சடங்குகளுக்காக மொத்தம் 161.7 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
@getty
செப்டம்பர் 8ம் திகதி ராணியார் மறைவுக்கு பின்னர் 10 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 19ம் திகதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் மாளிகையில் வைத்து எலிசபெத் ராணியார் காலமானார்.
பல்மோரல் மாளிகையில் இருந்து சாலை மார்க்கம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு எடின்பர்க் வரையில் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கிருந்து விமானத்தில் லண்டன் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, செப்டம்பர் 14ம் திகதி முதல் பாராளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதில் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கான செலவு என 73.7 மில்லியன் பவுண்டுகள் தொகையை உள்விவகார அமைச்சகம் செலவிட்டுள்ளது.
@getty
மேலும், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் 57.4 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில் 250,000 பேர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஸ்கொட்லாந்து அரசாங்கம் 18.8 மில்லியன்
அஞ்சலி செலுத்த காத்திருப்போரின் வரிசையானது 10 மைல்கள் வரையில் நீண்டுள்ளதாக கூறுகின்றனர்.
பால்மோரல் மாளிகையில் இருந்து எடின்பர்கில் உள்ள அரண்மனையில் ராணியார் உடலை கொண்டு செல்வதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் 18.8 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளது.
லண்டனில் செப்டம்பர் 19ம் திகதி முன்னெடுக்கப்பட்ட இறுதிச்சடங்குகளுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள், அரசியல் தலைவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
@getty
பாதுகாப்பு அமைச்சகம் 2.9 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகம் 2.6 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சகம் 2.1 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.