பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் ஜப்பான் நடத்துகிறது. உலகில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊர் என்பதாலும், அணுஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கான சிறந்த இடம் என்பதாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஜி7 கூட்டமைப்பில் உள்ள 7 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க ஷிரோஷிமாவுக்கு வருகை தர உள்ளனர். இந்த 7 நாடுகள் இல்லாது, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேஷியா, தென் கொரியா, வியட்நாம், கமரோஸ், குக் தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், “பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம். ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதோடு, ஜப்பான் பிரதமரோடு இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். அதோடு, வேறு சில தலைவர்களோடும் அவரது சந்திப்பு நிகழ இருக்கிறது.
இந்தியா – ஜப்பான் இடையே மிகச் சிறந்த நல்லுறவு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஜப்பானுக்கு வருகை தந்தார். அப்போது ஷின்ஷோ அபே ஜப்பான் பிரதமராக இருந்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான இருதரப்பு உறவு இருந்தது. தற்போது ஜப்பான் பிரதமராக கிஷிடோ உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான அந்த நல்லுறவு தற்போதும் சிறப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.