சென்னை:
தமிழகத்தையே உலுக்கி வந்த ஐஐடி மாணவர்களின் தற்கொலைக்கு முக்கியமான காரணம் தெரியவந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான டீம் களத்தில் இறங்கியதுமே பல மர்மங்கள் உடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலேயே மத்திய அரசால் நடத்தப்படும் ஐஐடி நிறுவனங்களுக்கு என்று தனி மதிப்பு உண்டு. சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் ஐஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பயிலும் மாணவர்கள் உலக அளவில் பெரிய பதவிகளை வகித்து வருகின்றனர். மற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை போல பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்து எல்லாம் ஐஐடிக்குள் நுழைந்துவிட முடியாது. அங்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர முடியும்.
நடுங்க வைக்கும் தற்கொலைகள்:
இது ஒருபுறம் இருக்க, ஐஐடி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்வது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை ஐஐடியில் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். இந்த வருடம் மட்டுமே சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனினும், இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது.
மர்மதேசமாகும் சென்னை ஐஐடி:
ஐஐடி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாமல் இருப்பதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள், இதுபோல் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், பேராசிரியர்களின் கெடுபிடியாலும் தற்கொலைகள் நிகழ்வதாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால், இதுதான் காரணம் என தீர்க்கமான ஒரு விஷயம் இதுவரை வெளியாகவில்லை.
களமிறங்கிய திலகவதி:
இந்நிலையில்தான், இந்த தற்கொலைகளுக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 12-ம் தேதி தனது விசாரணையை தொடங்கியது. ஐஐடி மாணவர்கள், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது. இதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திடுக் தகவல்:
இந்த முதற்கட்ட விசாரணையில், ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கொடுக்கும் அழுத்தமே மாணவர்களின் இந்த தற்கொலைக்கு காரணம் என பெற்றோர்களும், மாணவர்களும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு (Phd Students) பேராசிரியர்களாக இருக்கக்கூடியவர்கள், அதிக அளவில் அழுத்தம் கொடுப்பது தெரியவந்திருப்பதாக விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தங்களின் மதிப்பை நிலைநாட்டுவதற்காக, குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க வேண்டும் என பேராசிரியர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதே பெரும்பாலான மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.