நடிகர்கள்: அசோக் செல்வன், டிஜே பானு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: பாலாஜி சக்திவேல்
ஓடிடி: அமேசான் ப்ரைம்
சென்னை: Modern Love Chennai Review (மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்) மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் இமைகள் கதை எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ
தி நியூயார்க் டைம்ஸில் வாசகர்கள் தங்களது காதல் அனுபவங்களை கட்டுரைகளாக மாற்றி அனுப்பினர். அது மாடர்ன் லவ் என்ற பெயரில் புத்தகமாக உருமாறியது. பின்னர் அதனை அமேசான் ப்ரைம் வீடியோ வெப் சீரிஸாக இரண்டு சீசன்களை தயாரித்து வெற்றி கண்டது. அது இப்போது தமிழிலும் மாடன் லவ சென்னை என்ற பெயரில் ஆறு எபிசோடுகளை கொண்ட ஆந்தாலஜியாக உருவாகியிருக்கிறது.
இமைகள் லைன் என்ன?: இமைகள் கதை இரண்டாவது எபிசோடாக உருவாகியிருக்க காதல், கல்லூரி உள்ளிட்ட படங்களை இயக்கிய தடம் பதித்த பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். பாலாஜி தரணிதரன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இமைகள். ஹீரோயினுக்கு பார்வை குறைந்துகொண்டே போவதை தெரிந்துகொண்ட பின்பும் அவரை கைவிடாமல் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து தேற்றுவதுதான் ஒன்லைன்.
அசத்திய டிஜே பானு: வாழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த டிஜே பானு இதில் தேவி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். தனக்கு இருக்கும் பிரச்னையை தனது காதலனிடம் சொல்லும்போது நேர்மை, தெரிந்தும் தன்னை ஏற்றுக்கொண்ட காதலனை பார்த்து பெருமை, தனக்கு இருக்கும் வியாதி தனது குழந்தைக்கும் வந்துவிடுமோ என்பதை நினைத்து பதற்றம், பார்வை குறைபாடோடு குழந்தையை பள்ளிக்கு தனி மனுஷியாய் ரெடி பண்ணி அனுப்பி வேன் ட்ரைவரிடம் திட்டு வாங்கும்போது பொறுமை என அத்தனையையும் தனது கண்களிலேயே பார்வையாளர்களுக்கு கடத்திவிடுகிறார். நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் டிஜே பானுவுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் அமைய வாய்ப்பு உண்டு.
அசோக் செல்வன் என்ன செய்தார்?: ஒட்டுமொத்த பாரமும் டிஜே பானுவிடம் இருக்க அதை அவர் அசால்ட்டாக டீல் செய்துவிட்டார். இருப்பினும் தனக்கு கிடைத்த ஸ்பேஸில் சிறப்பாகவே நடித்திருக்கிறார் அசோக் செல்வன். தனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்று பேசும் இடத்திலும், குழந்தையை பள்ளிக்கு ரெடி செய்து அனுப்பாமல் நண்பருடன் ஃப்பொனில் அரட்டை அடிக்கும் இடத்திலும் ஒரு சராசரி இந்திய கணவராக பரிணமிக்கிறார். ஒரு சில இடங்களில் அசோக் செல்வனின் நடிப்பு பழையதை ஞாபகப்படுத்தினாலும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் அசோக் செல்வன்.
யுவனின் மேஜிக் இசை;ஜீவா சங்கரின் அசத்தல் கேமரா: படத்தின் மிக முக்கியமான பலமே பின்னணி இசையும், ஜீவா சங்கரின் கேமராவும். உணர்வு பூர்வமான காதல் கதைக்கு என்ன மாதிரியான இசையை கொடுக்க வேண்டுமோ அதை எஸென்ஸ் குறையாமல், கூடாமல் கொடுத்து ரசிகர்களின் காதுகளுக்கு விருந்து படைத்திருக்கிறார். கதையின் பல இடங்களிலும், க்ளைமேக்ஸிலும் வரும் பின்னணி இசை விண்டேஜ் யுவனை நியாபகப்படுத்துகின்றன.
அதேபோல் பேரன்பே எனது கண்ணில் கிழக்கு நீதானே பாடல் ப்யூர் மெலோடி ரகம். அதிலும் யுவன் ஷங்கர் ராஜா குரல் அந்த பாடலில் இணைந்ததும் பாடலுக்குள் வரும் ஈரம் நமது கண்களிலும் வந்துவிடுகிறது. இசை எந்த அளவுக்கு பலமாக இருந்ததோ அதே அளவுக்கு ஜீவா சங்கரின் கேமரா. டிஜே பானுவின் பார்வை குறைந்துகொண்டே போவதை ரசிகர்களுக்கு மிக மிக சிறப்பாக தனது கேமரா மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி, வீடு, நகரம் என எல்லா இடங்களிலும் அவரது கேமரா ரசிகர்களை நன்றாகவே கனெக்ட் செய்கிறது.
எல்லாம் சரி ஆனால்?: சிறு வயதிலேயே தனக்கு கண்ணில் பிரச்னை வந்ததால் தனியாளாக மருத்துவரிடம் சென்றதாக கூறுகிறார் தேவி (பானு). ஆனால் கடைசிவரை வீட்டில் யாருக்குமே தெரியாமல் ஒருவரால் எப்படி அதனை மறைக்க முடியும் என்பது கேள்விக்குறியே. முக்கியமாக இதனை ஏன் முதலில் வீட்டாரிடம் மறைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
அதேபோல் உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்ற ஆசையை காதலனிடம் காதலி சொல்லும்போது எப்படியும் அதை நிறைவேற்றிவிடுவார் என தோன்றுகிறது. ஆனால் கடைசிவரை தேவி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். இதன் மூலம் இயக்குநர் சொல்ல வருவது என்ன. எல்லா ஆண்களும் திருமணம் ஆன பிறகு உயர்ந்த காதலன் என்ற ஸ்தானத்திலிருந்து சராசரி கணவன் என்ற இடத்துக்கு நகர்ந்துவிடுவார்களா என்பதா?.
அதற்கு ஆம் என்றால் அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கதையில் அழுத்தமான எந்த காட்சியுமே இல்லையே. இப்படி இமைகள் கதையில் மைனஸ்களும் இருக்கின்றன. இப்படி குறைகள் இருப்பினும் அந்த க்ளைமேக்ஸ் ஷாட்டில் வீணையுடன் டிஜே பானு தோன்றும் இடம் ஒரு கவிதை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், காதலுக்கு தேவை காதல் மட்டும்தான் என்பதை அழுத்தி சொல்லியிருப்பதன் மூலம் இமைகள் நம் இமைகளை நிச்சயம் பனிக்க செய்யும்.