தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினர். இதில்11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவர்கள் 86.99 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 94.36 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மாணவர்களை விட 7.37 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அதிக தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த வகையில் 96.38 தேர்ச்சி சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், ஈரோடு இரண்டாவது இடத்திலும், கோவை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் 82.58 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் இன்று வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 9 மாணவர்களும், ஆங்கிலத்தில் 13 மாணவர்களும், இயற்பியல் 440 மாணவர்களும், விலங்கியல் 34 மாணவர்களும், வேதியியலில் 107 மாணவர்களும், உயிரியல் 65 மாணவர்களும், கணிதம் 17 மாணவர்களும், தாவரவியலில் 2 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதேபோல், கணினி அறிவியலில் 940 மாணவர்களும், வணிகவியலில் 214 மாணவர்களும், கணக்குப்பதிவியலில் 995 மாணவர்களும், பொருளியலில் 40 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.